மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு பர்கூர் வனப்பகுதியில் விடப்பட்ட கருப்பன் யானை 150 கி.மீ. நடந்து மீண்டும் தாளவாடியை நெருங்கியது


மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு பர்கூர் வனப்பகுதியில் விடப்பட்ட கருப்பன் யானை 150 கி.மீ. நடந்து மீண்டும் தாளவாடியை நெருங்கியது
x

மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு பர்கூர் வனப்பகுதியில் விடப்பட்ட கருப்பன் யானை 150 கிலோ மீட்டர் தூரம் நடந்து மீண்டும் தாளவாடி வனப்பகுதியை நெருங்கியதால் அங்குள்ள மலைவாழ் மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

ஈரோடு

அந்தியூர்

மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு பர்கூர் வனப்பகுதியில் விடப்பட்ட கருப்பன் யானை 150 கிலோ மீட்டர் தூரம் நடந்து மீண்டும் தாளவாடி வனப்பகுதியை நெருங்கியதால் அங்குள்ள மலைவாழ் மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

கருப்பன் யானை

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட தாளவாடி வனப்பகுதியில் இருந்து வௌியேறிய கருப்பன் என பெயரிடப்பட்ட காட்டு யானை, அங்குள்ள கிராம பகுதிகளில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து வாழை, கரும்பு, தென்னை, ராகி, மக்காச்சோளம் போன்ற பயிர்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தி அட்டகாசம் செய்து வந்தது. மேலும் தோட்டத்தில் காவலுக்கு இருந்த 2 விவசாயிகளையும் கருப்பன் யானை மிதித்து கொன்றது.

கடந்த 1 ஆண்டுக்கும் மேலாக அட்டகாசம் செய்து வந்த கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்ததுடன், போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் 6 முறை மயக்க ஊசி செலுத்தியும் கருப்பன் யானையை பிடிக்க முடியவில்லை.

மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு

பின்னர் கடந்த 17-ந் தேதி 7-வது முறையாக மயக்க ஊசி செலுத்தி கருப்பன் யானையை வனத்துறையினர் பிடித்தனர். அப்போது கும்கி யானையுடன் கருப்பன் யானை ஆக்ரோஷமாக சண்டையிட்டது. எனினும் கருப்பன் யானை அட்டகாசத்தை கும்கி யானை அடக்கியது. பின்னர் லாரியில் ஏற்றப்பட்ட கருப்பன் யானை, அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனப்பகுதியில் தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள பாலாற்று பகுதியில் விடப்பட்டது.

மயங்கிய நிலையில் யானை இருந்ததால் அதை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். மேலும் கருப்பன் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க வனப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டது. மயக்கம் தெளிந்த கருப்பன் யானை இயல்பு நிலைக்கு திரும்பியது. வனப்பகுதியில் உள்ள தீவனத்தை தின்றது. பாலாற்றில் தண்ணீர் குடித்தது.

150 கிலோ மீட்டர்

எனினும் கருப்பன் யானை, மற்ற யானைகளுடன் சேராமல் தனியாகவே காட்டுக்குள் சுற்றியது.

இந்தநிலையில் பாலாறு வழியாக கருப்பன் யானை வேலாம்பட்டி, குட்டையூர், மாக்கம்பாளையம் வரை 150 கிலோ மீட்டர் வரை நடந்து சென்றது. கருப்பன் யானையை அந்தந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பார்த்து உள்ளனர். மேலும் தாளவாடி பகுதியை சேர்ந்த சிலரும் கருப்பன் யானை பயணித்ததாக கூறப்படும் கிராமங்களுக்கு சென்றனர். அவர்களும் அந்த யானையை பார்த்துவிட்டு அது கருப்பன் யானை தான் என உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் இடம்பெயர்ந்து செல்லும் கருப்பன் யானை எந்த இடத்திலும் யாரையும் தொந்தரவு செய்யவில்லை என விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.

இன்னும் ஒரு வாரத்தில் கருப்பன் யானை ஆசனூர் வழியாக தாளவாடி வனப்பகுதியை சென்றடையும் என்று அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.

அச்சம்

இதுகுறித்து வன ஆர்வலர்கள் கூறுகையில், 'தாளவாடி வனப்பகுதி குளிர்ந்த சீதோஷ்ண நிலை உள்ளது. ஆனால் பர்கூர் வனப்பகுதி சற்று வெப்பம் நிறைந்த பகுதி ஆகும். எனவே சீதோஷ்ண நிலையை கருத்தில் கொண்டு கருப்பன் யானை தாளவாடிக்கு இடம் பெயர்ந்து இருக்கலாம்,' என்றனர்.

இதற்கிடையே கருப்பன் யானை மீண்டும் தாளவாடிக்கு வந்துவிடுமோ? என்ற அச்சத்தில் அந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் உள்ளனர்.


Next Story