2 கிலோ மீட்டர் அங்க பிரதட்சணம் செய்த பக்தர்
காரைக்குடி முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் மாசி-பங்குனி திருவிழாவையொட்டி பக்தர் ஒருவர் 2 கிலோ மீட்டர் தூரம் அங்க பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
காரைக்குடி
காரைக்குடி முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் மாசி-பங்குனி திருவிழாவையொட்டி பக்தர் ஒருவர் 2 கிலோ மீட்டர் தூரம் அங்க பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
மாசி-பங்குனி திருவிழா
காரைக்குடி மீனாட்சிபுரத்தில் இந்து சமய அறநிலையத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசி-பங்குனி திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி தினந்தோறும் அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. வருகிற 21-ந்தேதி இரவு முத்தாலம்மன் கோவிலில் இருந்து கோவில் கரகம் மற்றும் பக்தர்கள் மது, முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சியும், 22-ந் தேதி பால்குடம், காவடி மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும், மாலையில் கோவில் கரகம், மது மற்றும் முளைப்பாரி புறப்படுதல் நிகழ்ச்சியும் இரவு காப்பு பெருக்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
23-ந்தேதி இரவு அம்பாள் திரு வீதி உலா, மறுநாள் மாலை சந்தனகாப்பு அலங்காரம் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவையொட்டி காப்புகட்டி பல்வேறு நேர்த்திக்கடன் எடுக்க உள்ள பக்தர்கள் தினந்தோறும் காலை மற்றும் இரவு நேரங்களில் கோவில் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அங்க பிரதட்சணம்
இரவு கும்மி கொட்டுதல், கலை நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. இதுதவிர காலை மற்றும் இரவு நேரங்களில் பக்தர்கள் பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல், கும்பிடு தானம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு பக்தர் ஒருவர் முத்தாலம்மன் கோவிலில் இருந்து முத்துமாரியம்மன் கோவில் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு அங்க பிரதட்சணம் மேற்கொண்டார். இரவு 10 மணிக்கு தொடங்கி 12.30 மணிக்கு கோவிலில் வந்து நேர்த்திக்கடனை செலுத்தினார். கோவில் திருவிழா நடைபெற்று வருவதையொட்டி தற்போது காரைக்குடி நகர் முழுவதும் பக்தர்கள் மஞ்சள் வேட்டி மற்றும் மஞ்சள் புடவையுடன் வலம் வருகின்றனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன், கோவில் செயல் அலுவலர் மகேந்திரபூபதி மற்றும் கோவில் கணக்கர் அழகுபாண்டி ஆகியோர் செய்து வருகின்றனர்.