அங்கநாதீஸ்வரர் கோவில் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


அங்கநாதீஸ்வரர் கோவில் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x

அங்கநாதீஸ்வரர் கோவில் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

திருப்பத்தூர்

மடவாளம் அங்கநாதீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

கோவில்

திருப்பத்தூர் தாலுகா மடவாளம் கிராமத்தில் அங்கநாதீஸ்வரர் கோவில் உள்ளது. தஞ்சையை ராஜராஜன் ஆட்சி செய்த அதே காலத்தில் ஆலங்காயத்தை தலைமை இடமாகக் கொண்டு ரங்கநாதன் என்ற சிற்றரசர் ஆட்சி செய்தார். ரங்கநாதன் என்னும் பெயரால் அங்கநாதீஸ்வரர் என்று இந்த கோவில் அழைக்கப்படுவதாக கோவில் கல்வெட்டு கூறுகிறது.

சிறப்பு வாய்ந்த கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரத்துடன் மூஷிகம் மயில், ரிஷபம், காமதேனு, சிம்ம, வாகனங்களில் சாமி திருவீதி உலா வந்தது. தொடர்ந்து சாமிக்கு அபிஷேகம் செய்து குதிரை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது.

முக்கிய நிகழ்வாக கடந்த 1-ந் தேதி நடந்த திருக்கல்யாணத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேரோட்டம்

இதனை தொடரந்து 32 அடி உயரம் கொண்ட 2 குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் வளர்நாயகி உடனுறை அங்கநாதீஸ்வரர் அலங்கரிக்கப்பட்டு எழுந்தருளினர். தேரை திருப்பத்தூர் நல்லதம்பி எம்.எல்.ஏ., செயல் அலுவலர் சண்முகம் மற்றும் பொதுமக்கள் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து தேர்் கோவில் வழியாக ஆலங்காயம் மெயின் ரோடு வழியாக வந்தது அப்போது பக்தர்கள் நேர்த்திக் கடனாக உப்புக்கல், மற்றும் பொறி ஆகியவற்றை சாமி மீது வீசினார்கள் சாமிக்கு முன்பு சிறிய தேரில் விநாயகர், முருகர், பஞ்சமூர்த்திகள் உடன் சிவாச்சாரியார்கள் பக்தி பாடலை பாடியும் மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்தது வழிநெடுக்கிலும் பக்தர்கள் நீர் மோர், அன்னதானம் வழங்கினர்.

தேரோட்டத்தில் திருப்பத்தூர் ஒன்றிய குழு தலைவர் ஏ விஜயாஅருணாச்சலம், துணை தலைவர் டி.ஆர்.ஞானசேகரன், மாடப்பள்ளி உழவர் கூட்டுறவு சங்க தலைவர் ஏ.தேவராஜன், ஊராட்சி தலைவர் கோமதி கார்த்திகேயன் ஒன்றிய கவுன்சிலர் கஸ்தூரி ரகு, ஆவின் இயக்குனர் பி.ஆர்.சின்னப்பையன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் எல்.சிவலிங்கம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் டாக்டர் என். திருப்பதி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமச்சந்திரன், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் நிர்வாகி எம்.வெங்கடேஷ்பாபு உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு ரவி குழுவினரின் நையாண்டி மேளம் நடைபெற்றது. சாமி ராவணேஸ்வர உற்சவம், பஞ்ச மூர்த்திகள் அபிஷேகம் நடைபெறுகிறது.

சயன உற்சவம்

தொடர்ந்து வெள்ளிக்கிழமை சயன உற்சவத்தோடு பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் முடிவடைகிறது.

ஏற்பாடுகளை அங்கநாதீஸ்வரர் அறக்கட்டளை தலைவர் எஸ்.சி.வஜ்ஜிரவேலு, அறங்காவலர்கள் ஆர்.சபிதா ரமேஷ், எம்.ஜி.குணசேகரன், ஆய்வாளர் திலகர் மற்றும் விழா குழுவினர்கள் பன்னிரு திருமுறை மற்றும் அங்கநாதர் அறக்கட்டளை மற்றும் மடவாளம், மாடப்பள்ளி காளத்தியூர், செலந்தம்பள்ளி, அம்பேத்கர்புரம், மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story