5 ஆண்டுகளாக மரத்தடியில் செயல்படும் அங்கன்வாடி மையம்
கறம்பக்குடி அருகே கஜா புயலின் போது கட்டிடம் இடிந்து தரை மட்டமானதால் கடந்த 5 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் மரத்தடியில் செயல்பட்டு வருகிறது. விரைவில் அங்கு புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அங்கன்வாடி மையம்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பட்டத்திக்காடு ஊராட்சியை சேர்ந்த காக்கையகோன் தெரு கிராமம் உள்ளது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் வளாகத்திலேயே கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அங்கன்வாடி மையம் தொடங்கப்பட்டது. இதில் இப்பகுதியில் உள்ள 3 வயதிற்கு உட்பட்ட சுமார் 30 குழந்தைகள் கல்வி கற்று வருகின்றனர். மேலும் கர்ப்பிணிகள் மற்றும் சிறு குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து வழங்குவது, தடுப்பூசி போடுவது போன்ற பணிகளும் நடைபெற்று வருகிறது.
கஜா புயலில் தரைமட்டமானது
இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கஜா புயலின் போது இந்த அங்கன்வாடி மைய கட்டிடம் இடிந்து முற்றிலுமாக தரைமட்டமானது. இதையடுத்து 5 ஆண்டுகளாக இந்த அங்கன்வாடி மையம், கட்டிடம் இல்லாமல் தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள ஆலமரத்தில் செயல்பட்டு வருகிறது. சிறு குழந்தைகள் எவ்வித பாதுகாப்பும் இன்றி வெட்டவெளியில் அமர்ந்து அரிச்சுவடி கற்று வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இப்பகுதி மக்கள் பலமுறை புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது.
கழிவறை வசதியுடன்...
இது குறித்து அங்கன்வாடி மைய குழந்தைகளின் பெற்றோர்கள் கூறுகையில், இந்த கிராமத்தில் ஏழை கூலி தொழிலாளர்களே உள்ளோம். கட்டிடம் இல்லாததால் அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை அனுப்பவே பயமாக உள்ளது. இதனால் வேலைக்கு செல்லாமல் குழந்தைகளுடன் நாங்களும் மையத்திற்கு வரவேண்டி உள்ளது. எனவே காக்கையகோன் தெரு கிராமத்திற்கு விரைவில் குடிநீர், கழிவறை, வசதியுடன் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டவேண்டும் என தெரிவித்தனர்.