சத்துணவு பொருட்களை விற்பனை செய்த அங்கன்வாடி பொறுப்பாளர் பணியிடை நீக்கம்


சத்துணவு பொருட்களை விற்பனை செய்த அங்கன்வாடி பொறுப்பாளர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 30 May 2023 6:45 PM GMT (Updated: 30 May 2023 6:45 PM GMT)

திண்டிவனம் அருகே அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய முட்டை, சத்துணவு பொருட்களை விற்பனை செய்த அங்கன்வாடி மைய பொறுப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்

விழுப்புரம்

விழுப்புரம்

சத்துப்பொருட்கள் விற்பனை

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சலவாதியில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இங்கு 25-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆரம்பக்கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் முட்டை, சத்து மாவு உள்ளிட்டவை நாள்தோறும் இலவசமாக வழங்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய முட்டை மற்றும் சத்து மாவு ஆகியவற்றை அங்கன்வாடி மைய பொறுப்பாளரான மகேஸ்வரி என்பவர் கள்ளத்தனமாக வெளியிடங்களில் உள்ள பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருவது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலானது. அதில் ஒரு முட்டை 3 ரூபாய்க்கும், சத்துமாவு பாக்கெட் 25 ரூபாய்க்கும் என்று அங்கன்வாடி மைய பொறுப்பாளர் மகேஸ்வரி விற்பனை செய்வது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அங்கன்வாடி பொறுப்பாளர் பணியிடை நீக்கம்

இதைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறையின் திட்ட அலுவலர் அன்பழகி, இதுகுறித்து விசாரணை நடத்தினார். இதில் அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய முட்டை, சத்துமாவு உள்ளிட்ட பொருட்களை கள்ளத்தனமாக விற்பனை செய்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பான விசாரணை அறிக்கையை அவர், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைத்தார்.

இதன் அடிப்படையில் சலவாதி அங்கன்வாடி மைய பொறுப்பாளர் மகேஸ்வரியை பணியிடை நீக்கம்(சஸ்பெண்டு) செய்து மாவட்ட கலெக்டர் சி.பழனி உத்தரவிட்டுள்ளார்.


Next Story