தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு மே மாதம் விடுமுறை விட வேண்டும். குழந்தைகளின் வருகையை கணக்கிட்டு பிரதான மையங்களை குறு மையங்களாகவும், குறு மையங்களை பிரதான மையங்களோடு இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த மாதம் ஆர்ப்பாட்டம் செய்தனர். கடந்த 18-ந்தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர்.
இந்தநிலையில் நேற்று முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர். அதன்படி, தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நூற்றுக்கணக்கான அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் நேற்று மாலை 4 மணி அளவில் வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். போராட்டத்துக்கு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் சாந்தியம்மாள் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
போராட்டத்தின் போது மழை பெய்தது. இருப்பினும் மழையில் நனைந்து கொண்டே அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து இரவு 7.30 மணிக்கு போராட்டத்தை கைவிட்டனர். மீண்டும் இன்று (புதன்கிழமை) காத்திருப்பு போராட்டத்தை தொடங்க இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.