அங்கன்வாடி ஊழியர்கள்- உதவியாளர்கள் தர்ணா


அங்கன்வாடி ஊழியர்கள்- உதவியாளர்கள் தர்ணா
x

அங்கன்வாடி ஊழியர்கள்- உதவியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் மேனகா தலைமை தாங்கினார். அங்கன்வாடி மையத்தில் 10 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் பிரதான மையங்களை மினி மையமாக்குவதையும், 5 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மினிமையங்களை பிரதான மையத்துடன் இணைக்கும் திட்டத்தையும் கைவிடவேண்டும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு 2 அல்லது 3 மையங்களை கவனித்துக்கொள்ளும் கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளதால், அனைத்து ஊழியர்களும் கடும் பணிச்சுமையுடன் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். ஆகவே காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு மே மாதம் விடுமுறை வழங்க வேண்டும். ஊட்டச்சத்து மேம்படுத்துதல் என்ற பெயரில் மையங்களை இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். 10 ஆண்டுகள் சீனியாரிட்டி உள்ள பணியாளர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் தமிழரசி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற 25-ந் தேதி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.


Next Story