அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் 2-வது நாளாக போராட்டம்
அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளி, கல்லூரிகளுக்கு வழங்குவதுபோல் அங்கன்வாடியில் பயிலும் 2 முதல் 6 வயது வரை உள்ள மாணவர்களுக்கும் மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அளிக்க வேண்டும். எரிவாயு சிலிண்டருக்கான தொகையை ரசீதில் உள்ளதுபோல் முழுமையாக வழங்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் மாலை தொடங்கிய இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் மல்லிகா பேகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சித்ரா, மாவட்ட பொருளாளர் ராணி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர். விடிய விடிய நடந்த இந்த போராட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் நேற்று காலையும் 2-வது நாளாக தொடர்ந்தது. இந்நிலையில் சமூகநலத்துறை அமைச்சா் கீதாஜீவன் சங்க பிரதிநிதிகளுடன் சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தமிழகம் முழுவதும் அங்கன்வாடி ஊழியா்கள் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. அதன்படி, திருச்சியிலும் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.