அங்கன்வாடி ஊழியர்-உதவியாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
கோாிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்-உதவியாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் (சி.ஐ.டி.யூ.) சார்பில் நேற்று மாலை காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் தவமணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரேமா, சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், மாநில செயற்குழு உறுப்பினர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில், குழந்தைகளின் நலன்கருதியும், வெயிலின் தாக்கத்தையும், தற்போது பரவிவரும் காய்ச்சலையும் கருத்தில் கொண்டு கோடை விடுமுறை அளிக்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். பிரதான அங்கன்வாடி மையங்களை மினி மையமாக்குவதையும், குறு மையத்தை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தையும் கைவிட வேண்டும். பதவி உயர்வு வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.