அங்கராயநல்லூர் மேற்கு கிராம பட்டாக்கள் 100 சதவீதம் கணினியில் பதிவேற்றம்
அங்கராயநல்லூர் மேற்கு கிராம பட்டாக்கள் 100 சதவீதம் கணினியில் பதிவேற்றிய அலுவலர்களுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
தமிழக அரசின் உத்தரவின்படி 13 துறைகளை ஒருங்கிணைத்து ஒற்றை சாளர முறையில் வேளாண் அடுக்கு திட்டத்தின் கீழ் விவசாயிகளின் பட்டாக்களின் அடிப்படை விவரங்கள் சேகரித்து இணைய வழியில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் இப்பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே செந்துறை தாலுகா, அயன்தத்தனூர் கிராமத்தில் உள்ள பட்டாக்களை முழுமையாக 100 சதவீதம் கணினியில் பதிவேற்றம் செய்த கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது உடையார்பாளையம் தாலுகா, அங்கராயநல்லூர் (மேற்கு) கிராமத்தில் உள்ள 1,492 பட்டாக்களையும் முழுமையாக 100 சதவீதம் கணினியில் பதிவேற்றம் செய்த கிராம நிர்வாக அலுவலர் அனிதாவையும், கிராம உதவியாளர் மருதவாணனையும் கலெக்டர் ரமணசரஸ்வதி கலெக்டர் அலுவலகத்துக்கு நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இதேபோன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள மற்ற கிராமங்களிலும் அயன்தத்தனூர், அங்கராயநல்லூர் (மேற்கு) கிராமங்களை போல பட்டாக்களை முழுவதுமாக கணினியில் பதிவேற்றம் செய்யும் பணியினை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விரைவாக முடிக்க வேண்டும், என்று கலெக்டர் கேட்டு கொண்டார்.