நடுவழியில் இறக்கி விட்டதால் ஆத்திரம்: தனியார் பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் புவனகிரியில் பரபரப்பு


நடுவழியில் இறக்கி விட்டதால் ஆத்திரம்: தனியார் பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் புவனகிரியில் பரபரப்பு
x
தினத்தந்தி 29 Jan 2023 12:15 AM IST (Updated: 29 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

புவனகிரியில் தனியார் பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

புவனகிரி,

சிதம்பரத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு கடலூருக்கு தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சில் புவனகிரியை சேர்ந்த பயணிகள் ஏறினர். அப்போது பஸ் கண்டக்டர் இந்த பஸ் புவனகிரி செல்லாது, கீழே இறங்குமாறு கூறினார்.

இதனால் கண்டக்டருக்கும், பயணிகளுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இருப்பினும் பயணிகள் யாரும் கீழே இறங்காமல், பஸ்சில் பயணம் செய்தனர்.

கஞ்சித்தொட்டி முனை பேருந்து நிறுத்தத்தில் பஸ் வந்ததும் புவனகிரியை சேர்ந்த பயணிகளை அங்கேயே இறக்கி விட்டு விட்டு பஸ் புறப்பட்டு சென்றது.

இதையடுத்து அந்த பயணிகள் மற்றொரு பஸ்சில் ஏறி புவனகிரி சென்றனர். பின்னர் அவர்கள் நடந்த சம்பவம் குறித்து பொதுமக்களிடம் தெரிவித்தனர்.

பஸ் சிறைபிடிப்பு

இந்த நிலையில் நேற்று காலையில் அந்த பஸ் கடலூரில் இருந்து சிதம்பரம் செல்வதற்காக புவனகிரி பஸ் நிலையத்துக்கு வந்தது. இதுபற்றி அறிந்த பொதுமக்கள் அங்கு வந்து பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நேற்று (அதாவது நேற்று முன்தினம்) இரவு புவனகிரிக்கு பஸ் வந்து செல்லாதது குறித்து டிரைவர், கண்டக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் புவனகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் டிரைவர், கண்டக்டரிடம் இனிமேல் பஸ் புவனகிரி வந்து தான் செல்லவேண்டும், இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். இதையடுத்து பொதுமக்கள் பஸ்சை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story