போலீசில் புகார் கொடுத்ததால் ஆத்திரம்: பெண்ணை தாக்கிய தாய்-மகன் மீது வழக்கு
கம்பத்தில் போலீசில் புகார் கொடுத்த ஆத்திரத்தில் பெண்ணை தாக்கிய தாய்-மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கம்பம் 1-வது வார்டு கோம்பை ரோடு பகுதியைச் சேர்ந்த வீரபத்திரன் மனைவி சபீனா (வயது 26). கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இவரது தம்பி ராசு (22), அதே பகுதியைச் சேர்ந்த ரோகித் என்பவர் பக்கத்து வீட்டு நாயை திருடி சென்றதை நாயின் உரிமையாளரிடம் கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து சபீனா குடும்பத்தினர் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ரோகித், அவரது தாய் பேச்சியம்மாள் ஆகியோர் சபினா வீட்டிற்கு சென்று எங்கள் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கிறாயா? என கேட்டு அவதூறாக பேசியதுடன், சபீனாவை தாக்கியுள்ளனர். இதை தடுக்க வந்த அவரது தாயையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் சபீனா புகார் கொடுத்தார். அதன்பேரில் ரோகித், அவரது தாய் பேச்சியம்மாள் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.