சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தேரோட்டம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தேரோட்டம் இன்று(ஞாயிற்றுக் கிழமை) நடைபெற உள்ளது
சிதம்பரம்
6 மகா அபிஷேகம்
சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதில் மார்கழி மாதம் நடைபெறும், ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனி திருமஞ்சன திருவிழாவும் சிறப்பு வாய்ந்தவையாகும். ஏனெனில், இந்த 2 உற்சவத்தின் போதும் மூலவராகிய ஆனந்த நடராஜமூர்த்தி, சிவகாம சுந்தரி அம்மனுடன் உற்சவராக தேரில் எழுந்தருளி வலம் வருவார்.
தேரோட்டம்
அதன்படி இந்தாண்டுக்கான ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 17-ந்தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை, மாலை இரு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும், கடந்த 21-ந் தேதி தெருவடைச்சான் உற்சவமும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 5 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் தனித்தனி தேரில் கீழ வீதியில் இருந்து புறப்பட்டு வலம் வருவார்கள்.
ஆனி திருமஞ்சனம்
சிகர நிகழ்ச்சியான ஆனித் திருமஞ்சன விழா நாளை(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
முன்னதாக தேரோட்டத்தை முன்னிட்டு தேர்களை சுத்தம் செய்து அலங்கரிக்கும் பணிகள் நேற்று நடைபெற்றது.