நஞ்சுண்ட ஞானதேசிக ஈஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா
தியாகதுருகம் நஞ்சுண்ட ஞானதேசிக ஈஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடைபெற்றது.
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகத்தில் பிரசித்தி பெற்ற நஞ்சுண்ட ஞானதேசிக ஈஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில் ஆனந்த நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி சிலை புதிதாக அமைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை 4 மணிக்கு கோவிலில் சிறப்பு யாக பூஜை நடந்தது. பின்னர் 6 மணிக்கு ஆனந்த நடராஜர், சிவகாமசுந்தரி சிலை மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆனி திருமஞ்சன விழா நடைபெற்றது. இதையொட்டி பால், தயிர், இளநீர் உள்பட 54 வகையான பொருட்களை கொண்டு ஆனந்த நடராஜர், சிவகாமசுந்தரிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவில் சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.