திருவானைக்காவல், லால்குடி கோவில்களில் ஆனி திருமஞ்சனம்


திருவானைக்காவல், லால்குடி கோவில்களில் ஆனி திருமஞ்சனம்
x

திருவானைக்காவல், லால்குடி கோவில்களில் ஆனி திருமஞ்சனம் நடைபெற்றது.

திருச்சி

ஸ்ரீரங்கம், ஜூலை.7-

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நேற்று முன் தினம் நடைபெற்றது. இதையொட்டி அர்ச்சகர்கள் காவிரி ஆற்றில் இருந்து வெள்ளி குடத்தில் புனிதநீர் எடுத்து அதை கோவில் யானை அகிலா மீது வைத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். அந்த புனிதநீரால் இரவு 7 மணிக்கு சுவாமி நடராஜர் மற்றும் சிவகாமி அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் சிறப்பு அலங்காரம், பூஜைகள் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவின் 2-ம் நாளான நேற்று காலை சூரிய உதயத்திற்கு முன்பு ஆனந்த நடராஜர் தரிசனம் நடைபெற்றது. பின்னர் காலை 9 மணிக்கு சுவாமி நடராஜர், சிவகாமி அம்மன் வெள்ளிமஞ்சனத்தில் எழுந்தருளி நான்காம் பிரகாரத்தில் வீதி உலா வந்தனர். அதனை தொடர்ந்து ஊடல் உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நடராஜரும், சிவகாமி அம்மனும் ஒருசேர பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பகல் 12 மணிக்கு திருஅன்னப்பாவடை நிகழ்ச்சியும், மகாதீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

இதேபோல் லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன வழிபாடு நடைபெற்றது. முன்னதாக காலை 9.30 மணி அளவில் நடராஜருக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர். மாலை 6-மணி அளவில் நடராஜ பெருமான் திருவீதி உலா நடைபெற்றது.


Next Story