கன்றுக்குட்டியை கொன்று தூக்கி சென்ற மர்ம விலங்கு சிறுத்தையா
ஊதியூர் அருகே தோட்டத்தில் இருந்த கன்றுக்குட்டியை கொன்று தூக்கி சென்ற மர்ம விலங்கு சிறுத்தையாக இருக்குமோ என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஊதியூர் அருகே தோட்டத்தில் இருந்த கன்றுக்குட்டியை கொன்று தூக்கி சென்ற மர்ம விலங்கு சிறுத்தையாக இருக்குமோ என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஆட்டை தூக்கிச்சென்றது
காங்கயத்தை அடுத்த ஊதியூர் தாயம்பாளையத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி விவசாயி. இவரது தோட்டம் ஊதியூர் மலையடிவாரத்தில் உள்ளது. கடந்த 3-ந் தேதி இரவு வழக்கம்போல இரவில் ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுக்குச்சென்றுவிட்டார்.
அடுத்த நாள் காலையில் சென்று பார்த்தபோது ஆடுகளில் ஒன்று குறைவாக இருந்தது. பட்டியைச்சுற்றிப்பார்த்தபோது ஏதோ விலங்கின் கால்தடம் இருந்தது. விலங்கின் கால் தடம் சென்ற திசையில் சென்று பார்த்தபோது, சிறிது தூரத்தில் ஆட்டின் கழுத்துப் பகுதி மட்டும் கிடந்தது.
வனத்துறைக்கு தகவல்
சுமார் 6 அடி உயர பட்டிக்குள் இருந்து ஆட்டைக் கவ்விய மர்ம விலங்கு அலேக்காக தூக்கிக்கொண்டு பட்டியைத் தாண்டிக் குதித்துள்ளது. அதனால் ஆட்டை கவ்விச் சென்றது சிறுத்தையாக இருக்குமோ என்ற அச்சத்தில் காங்கயம் வனத்துறையினருக்கு தகவல்அளித்தனர். காங்கயம் வனத்துறை அலுவலர் தனபால் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்று மர்ம விலங்கின் தடங்களை ஆய்வு செய்தனர். மேலும் ஆடு போடப்பட்டிருந்த இடத்தில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர்.
இந்த நிலையில் நேற்று அந்த கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது சிறுத்தை போன்ற விலங்குகளின் உருவம் பதிவாகவில்லை. இதை தொடர்ந்து அப்பகுதியில் வெவ்வேறு கோணங்களில் 100 மீட்டர் சுற்றளவில் 5 கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர். அந்த கேமராக்களில் சிறுத்தை குறித்த காட்சிகள் ஏதும் பதிவு ஆகவில்லை.
கன்றுக்குட்டியை தூக்கிய மர்ம விலங்கு
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊதியூர் மலையடிவாரத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் கன்றுக்குட்டி ஒன்று காணாமல் போயுள்ளது. இந்தநிலையில் அவரது தோட்டத்தில் இருந்து 30 மீட்டர் தொலைவில் ஊதியூர் மலை வனப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது.
இதையடுத்து அப்பகுதிக்கு சென்று பார்த்த போது கன்றுக்குட்டி வனப்பகுதியில் செத்துக்கிடந்தது. தகவல் அறிந்த காங்கயம் வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
கவனமுடன் இருக்க வேண்டும்
இதுகுறித்து காங்கயம் வனத்துறையினர் கூறியதாவது:-
வெறி நாய்களால் பெரிய கன்றுக்குட்டியை தூக்கி செல்ல முடியாது. சிறுத்தையால் மட்டுமே தூக்கி செல்ல முடியும். இருப்பினும் இதுவரை ஆய்வு செய்து பார்த்ததில் சிறுத்தை குறித்த உறுதியான தகவல் கிடைக்கவில்லை. முன்பு சில இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் சிறுத்தை குறித்த காட்சிகள் ஏதும் பதிவாகவில்லை. ஆனால் பொதுமக்கள் சிலர் சிறுத்தையை பார்த்ததாக கூறுகின்றனர். எனவே பொதுமக்கள் கவனமுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.