டி.என்.பாளையம் அருகே கோழிப்பண்ணையில் நடமாடிய மர்ம விலங்கு; சிறுத்தையா? பொதுமக்கள் பீதி
டி.என்.பாளையம் அருகே கோழிப்பண்ணையில் நடமாடிய மர்ம விலங்கு; சிறுத்தையா? பொதுமக்கள் பீதி
டி.என்.பாளையம்
டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வினோபா நகரில் செந்தில்குமார் என்பவர் தன்னுடைய தோட்டத்தில் பண்ணை அமைத்து கோழி, வாத்துகள் வளர்த்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் செந்தில்குமார் கோழிகளுக்கும், வாத்துகளுக்கும் தீவனம் வைக்க சென்றார். அப்போது பண்ணையில் இருந்து ஒரு மர்ம விலங்கு செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து செந்தில்குமார் டி.என்.பாளையம் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனச்சரகர் கணேஷ் பாண்டியன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று தோட்டத்தில் பதிவாகியிருந்த கால் தடங்களை ஆய்வு செய்தனர். ஆனால் அது என்ன விலங்கு என்று உடனடியாக கண்டுபிடிக்க முடியவி்ல்லை,
இதையடுத்து பண்ணைக்கு மீண்டும் மர்ம விலங்கு வர வாய்ப்பு இருக்கலாம் என்று 3 இடங்களில் வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா பொருத்தி உள்ளனர்.
பண்ணை வனப்பகுதியையொட்டி உள்ளது. அதனால் நடமாடியது சிறுத்தையாக இருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.