கால்நடை தடுப்பூசி முகாம்
ஆலங்குளம் அருகே நெட்டூர் கிராமத்தில் கால்நடை தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
ஆலங்குளம்:
நெல்லை மண்டல இணை இயக்குனர் டாக்டர் தியோபிலஸ் ரோஜர் அறிவுரைப்படி புருசெல்லோசிஸ் எனப்படும் கன்று வீச்சு நோய் தடுப்பூசி முகாம் மற்றும் இரு வார கோழிக் கழிச்சல் தடுப்பூசி முகாம் நெட்டூரில் நடைபெற்றது. தென்காசி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், கோட்ட உதவி இயக்குனர் டாக்டர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். நோய் புலனாய்வுப் பிரிவு நெல்லை உதவி இயக்குநர் மருத்துவர் ஜான் சுபாஷ் முகாமை தொடங்கி வைத்தார். நெட்டூர் கால்நடை உதவி மருத்துவர் ராமசெல்வம், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கீதா மற்றும் பிச்சையா ஆகியோரால் கன்றுக்குட்டிகளுக்கு அடையாள காது வில்லை பொருத்தி, குடற்புழு நீக்கம் செய்த பின்பு தடுப்பூசி போடப்பட்டது. 4 முதல் 8 மாத கன்றுக்குட்டிகளுக்கு ஒருமுறை புருசெல்லோசிஸ் தடுப்பூசி போடப்பட்டது. மேலும் கால்நடை வளர்ப்போர் தங்களது 4 முதல் 8 மாத கிடேரிக் கன்றுக் குட்டிகளை தவறாது தடுப்பூசி போடும் இடத்திற்கு கொண்டு வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டு கன்று வீச்சு நோயிலிருந்து தங்கள் மாடுகளை காத்துக்கொள்ளுமாறு டாக்டர் மகேஸ்வரி தெரிவித்தார்.