வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நிறைவு
தளி:
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கோடைகால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்தது.
வனவிலங்கு கணக்கெடுப்பு
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, செந்நாய், சிறுத்தை, புள்ளிமான், கடமான், புனுகுபூனை, கீரிப்பிள்ளை, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, கரடி, கருமந்தி, உடும்பு, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனச்சரகங்களில் ஆண்டுதோறும் கோடைகாலம் மற்றும் குளிர் காலத்தில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகளின் எண்ணிக்கையை உறுதி செய்யும் வகையில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் குளிர்கால கணக்கெடுப்பு பணி கடந்த 24 -ந் தேதி தொடங்கியது. இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
கணக்கெடுப்பு பணிக்கு ஏதுவாக உடுமலை அமராவதி வனச்சரகங்கள் மற்றும் வெளிமண்டல பகுதியான கொழுமம் வந்தரவு வனச்சரகங்களில் உள்ள 34 சுற்றுகளில் 53 நேர்கோட்டு பாதைகள் அமைக்கப்பட்டது.
வனப்பணியாளர்கள் செல்போன் செயலி மற்றும் ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது முதல் 3 நாட்களில் சுற்றுகளில் காணப்பட்ட புலி, சிறுத்தை உள்ளிட்ட மாமிச உண்ணிகள் மற்றும் மிகப்பெரிய தாவர உண்ணிகளின் தடயங்கள் பதிவு செய்யப்பட்டது.
அறிக்கை சமர்ப்பிப்பு
அடுத்த 3 நாட்களில் நேர்கோட்டுப் பாதையில் நடந்து சென்று நேரடியாக காணப்பட்ட இறை விலங்குகள், தாவரங்கள், மனித இடையூறுகள், குளம்பினங்களின் எச்சம் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்றது. மேலும் அதே பாதையில் திரும்பி வரும்போது ஒவ்வொரு 400 மீட்டரிலும் உள்ள தாவர வகைகளும் கணக்கீடு செய்யப்பட்டது. இறுதி நாளான நேற்று கணக்கெடுக்கப்பட்ட வனவிலங்குகள் குறித்த அறிக்கை தயார் செய்யப்பட்டு கோவையில் உள்ள கள இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கணக்கெடுப்பு பணியில் வனச்சரக அலுவலர்கள் சிவக்குமார், சுரேஷ், முருகேசன் உள்ளிட்ட வனவர்கள், வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் பங்கேற்றனர். கணக்கெடுப்பு பணியின்போது யானை, காட்டெருமை, மான், கரடி சிறுத்தையின் காலடி தடம் உள்ளிட்டவை நேரடியாக பார்க்கப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.