கோடியக்கரை சரணாலயத்தில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் விலங்குகள்


தினத்தந்தி 10 Jun 2023 12:15 AM IST (Updated: 10 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வெயில் சுட்டெரித்த போதிலும், கோடை மழையால் குளங்களில் தண்ணீர் உள்ளதால் கோடியக்கரை சரணாலயத்தில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் விலங்குகளை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து ரசிக்கின்றனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வெயில் சுட்டெரித்த போதிலும், கோடை மழையால் குளங்களில் தண்ணீர் உள்ளதால் கோடியக்கரை சரணாலயத்தில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் விலங்குகளை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து ரசிக்கின்றனர்.

வனவிலங்கு சரணாலயம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை பகுதியில் வங்காள விரிகுடாவும், பாக்ஜலசந்தியும் இணையும் பகுதியை ஒட்டி 27 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இந்த பசுமை மாறாக்காட்டில் புள்ளிமான், வெளிமான், குரங்கு, நரி, பன்றி, குதிரை, மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.

இந்த காட்டின் தென்புறத்தில் பாக்ஜலசந்தி கடற்கரைபகுதியில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் வரலாற்று நினைவுச் சின்னமாக இன்னமும் விளங்குகிறது.

மூலிகை தாவரங்கள்

இந்த சரணாலயத்தில் 154 மூலிகை உள்ளிட்ட 271 வகையான தாவர வகைகள் உள்ளன. 52 குளங்களும், 18 நீர் தேக்கத்தொட்டிகளும் உள்ளன. இந்த சரணாலயத்தில் பழுபாகற்காய், பாலா பழம் மனிதர்களுக்கு பறவைகளுக்கு உணவாக அமைகிறது.

சரணாலயத்தில் உள்ள சேர்வராயன் கோவிலில் மீனவர்கள் மீன்கள் அதிகம் கிடைக்க வேண்டியும், உப்பளத் தொழிலாளர்கள் உப்பு உற்பத்தி நன்றாக இருக்க வேண்டியும் கிடா வெட்டி ஆண்டுதோறும் பூஜை செய்கின்றனர்.

கூட்டம் கூட்டாக சுற்றிதிரியும் விலங்குகள்

கடந்த ஆண்டு வெயிலின் காரணமாக சரணாலயத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால் இந்த ஆண்டு வெயில் சுட்டெரித்தாலும் அவ்வப்போது கோடை மழை பெய்ததால் குளங்களில் தண்ணீர் உள்ளது. இதனால் கூட்டம், கூட்டமாக விலங்குகள் சுற்றித்திரிகின்றன. இந்த விலங்குகளை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

வனவிலங்கு சரணாலயத்திற்கு எதிர்புறம் பறவைகள் சரணலாயம் 20 ஆயிரம் ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை ஈரான், ஈராக், ரஷ்யா, பாகிஸ்தான், சைபீரியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 274 பறவை இனங்கள் வந்து செல்கின்றன. இந்த பறவைகளை பம்ப்ஹவுஸ், முனியப்பன் ஏரி, ராமர் பாதம், முனங்காடு, சவுக்கு பிளாட் ஆகிய பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் அதிக அளவில் காணலாம்.

பறவைகளை பார்க்க உகந்த நேரம்

தற்போது தங்கள் நாட்டிற்கு திரும்ப முடியாமல் உள்ள பறவைகள் கோடைமழையால் நீர் நிரம்பி உள்ள முனியப்பன் ஏரியில் தங்கி உள்ளன. பறவைகளுக்கு பாதுகாப்பாக விளங்கும் இந்த பறவைகள் சரணாலயம் 2002-ம் ஆண்டு 17-வது ராம்சார்சைட் என்ற அந்தஸ்தை பெற்றது.

இந்த கோடியக்கரையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயம், புராண கால நினைவுச்சின்னங்கள் உள்ளிட்டவைகளை சுற்றிப்பார்ப்பதற்கு காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையும் உகந்த நேரமாகும்.

வாகன வசதி

வனவிலங்குகளை சுற்றிப்பார்க்க சூழல் மேம்பாட்டுக்குழு சார்பில் வாகன வசதியும், சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு 3 ஓய்வு விடுதிகளும், பறவைகளை பார்ப்பதற்கு பைனாகுலர் மற்றும் வழிகாட்டிகள் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

கோடியக்கரையின் சிறப்பு அனைத்தையும் சுற்றுலா பயணிகள் அறிந்துகொள்ள வனச்சரக சரணாலய நுழைவு வாயிலில் தகவல் விளக்க கூடம் அகியவை அமைக்கப்பட்டுள்ளது.


Next Story