நெல்லையப்பர் கோவிலில் நாளை ஆனித்தேரோட்டம்


நெல்லையப்பர் கோவிலில் நாளை ஆனித்தேரோட்டம்
x

நெல்லையப்பர் கோவிலில் ஆனித்தேரோட்டம் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. தேரோட்டத்தையொட்டி நாளை நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி

நெல்லையப்பர் கோவிலில் ஆனித்தேரோட்டம் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. தேரோட்டத்தையொட்டி நாளை நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லையப்பர் கோவில்

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா காரணமாக 2 ஆண்டுகள் ஆனித்தேரோட்டம் நடைபெறவில்லை.

இந்த ஆண்டு ஆனித்திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதற்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து உள்ளது.

தேரோட்டத்தில் விநாயகர், சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 தேர்களும் 4 ரத வீதிகளிலும் வலம் வரும்.

தேரோட்டத்தை காணவும், தேரை வடம் பிடித்து இழுக்கவும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ரத வீதிக்கு வருகை புரிவார்கள்.

தேரோட்டத்திற்கு தேரை தயார்படுத்தும் பணி தொடங்கி தேர்களை சுத்தம் செய்தல், குதிரை பொம்மைகளை பொருத்துதல், கம்புகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் முடிவடைந்து விட்டது. நேற்று தேருக்கு வடம் கயிறு கட்டும் பணி நடைபெற்றது.

வீதி உலா

விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இந்து சமய சொற்பொழிவு, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

7-ம் நாள் திருவிழாவான நேற்று காலை சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் ஆகியோர் பல்லக்கு சப்பரத்தில் தவழ்ந்த கோலத்தில் 4 ரத வீதிகளிலும் உலா வந்தனர். இரவு 7 மணிக்கு சுவாமி வெள்ளி குதிரை வாகனத்திலும், அம்மன் காமதேனு வாகனத்திலும் வீதி உலா நடந்தது. இதைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு சுவாமி நடராஜ பெருமாள் வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தீபாராதனை

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7-30 மணிக்கு சுவாமி நடராஜபெருமான் வெள்ளை சாத்தி எழுந்தருளளும், 8 மணிக்கு சுவாமி நடராஜப்பெருமாள் பச்சை சாத்தி எழுந்தருளளும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதி உலா நடக்கிறது.

இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் வீதி உலா, சுவாமி தங்க கைலாசபர்வத வாகனத்திலும், அம்மன் தங்க கிளி வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு தேரடி கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், படையல் பூஜையும் நடக்கிறது.

நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 4-30 மணிக்கு சுவாமி அம்மன் தேருக்கு எழுந்தருளளும், காலை 9 மணிக்கு மேல் தேரோட்டமும் நடக்கிறது. 9 மணிக்கு தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் அமைச்சர்கள், எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

உள்ளூர் விடுமுறை

தேரோட்டத்தையொட்டி நாளை (திங்கட்கிழமை) நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் நெல்லை மாவட்டம் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தேரோட்டத்தை காண வருவார்கள் என்பதால் 4 ரத வீதிகளிலும் கழிப்பிட வசதி, சுகாதாரமான குடிநீர் வழங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

1,500 போலீசார்

மேலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் இருப்பதற்காக வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் தயார் செய்யப்பட்டுள்ளது.

தேரோட்டத்தையொட்டி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் உத்தரவின் பேரில் துணை போலீஸ் கமிஷனர்கள் சீனிவாசன், சரவணகுமார், அனிதா ஆகியோர் நேரடி மேற்பார்வையில் உதவி போலீஸ் கமிஷனர்கள் விஜயகுமார், அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.


Next Story