நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம்
நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
தமிழகத்தில் புகழ்பெற்ற சிவாலயங்களில் நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலும் ஒன்றாகும். இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இதில் முதன்மையானதாக ஆனிப்பெருந்திருவிழா கொண்டாடப்படுகிறது. கொரோனா ஊரடங்கால் கடந்த 2 ஆண்டுகளாக ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம் நடைபெறவில்லை. கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கோவில்கள் மீண்டும் திறக்கப்பட்டு, விழாக்கள் நடைபெறுகிறது. அதன்படி, நெல்லையப்பர் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி, அம்பாளுக்கு பல்வேறு வகையான அபிஷேகம், அலங்கார தீபாராதனை, வீதி உலா போன்ற நிகழ்ச்சிகளும், பக்தி இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தன.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. காலை 9.26 மணிக்கு சுவாமி தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தமிழக சபாநாயகர் மு.அப்பாவு, கலெக்டர் விஷ்ணு, நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் உள்ளிட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை யூனியன் தலைவர் கே.எஸ்.தங்கபாண்டியன், கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, கணேஷ்குமார் ஆதித்தன், மூளிகுளம் பிரபு, பா.ஜனதா கட்சி மாவட்ட தலைவர் தயா சங்கர் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் அய்யர் சிவமணி, நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர், தாசில்தார் செல்வ சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகளும் தேரோட்டத்தில் பங்கேற்றனர். தமிழகத்தின் 3-வது பெரிய தேர் என்ற பெருமைக்குரிய சுவாமி நெல்லையப்பரின் தேர், ரதவீதிகளில் அசைந்தாடி வலம் வந்தது காண்போர் மனதை கொள்ளை கொண்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் வடங்களை பிடித்து இழுத்து விண்ணதிர பக்தி கோஷங்களை எழுப்பியவாறு இழுத்தனர்.
முழுக்க, முழுக்க பக்தர்களின் கைகளால் இழுக்கப்பட்ட தேரானது கீழரதவீதி, வாகையடி முக்கு, தெற்கு ரதவீதி, சந்திப்பிள்ளையார் கோவில் முக்கு, மேல ரதவீதி, லாலா சத்திரம் முக்கு, வடக்கு ரதவீதி, ஈசான விநாயகர் கோவில் முக்கு என ரதவீதிகளில் வலம் வந்து கீழரதவீதியில் சுவாமி சன்னதிக்கும் -அம்பாள் சன்னதிக்கும் நடுவே உள்ள நிலையை வந்தடைந்தது. இதற்கிடையே, அம்பாள் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் இழுத்தனர். மாலையில் சுவாமி தேரை தொடர்ந்து, அம்பாள் தேரும் நிலையை வந்தடைந்தது.