ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவிலில் ஆனித்திருவிழா கொடியேற்றம்
ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவிலில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவிலில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
சோமநாத சுவாமி
திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் ஆனி உத்திர பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அதிகாலையில் கும்ப பூஜை, ஹோமம் நடைபெற்றது. பின்னர் கொடிப்பட்டம் திருவீதி உலா சென்று கோவிலை வந்தடைந்ததும், 5 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து கொடி மரத்துக்கு சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கோவில் மணியம் சுப்பையா, பக்த ஜன சபை செயலாளர் அரிகிருஷ்ணன், பொருளாளர் கற்பக விநாயகம், ஆறுமுகநேரி நகர் நல மன்ற தலைவர் பூபால்ராஜன், ஆறுமுகநேரி சைவ வேளாளர் சங்க தலைவர் சங்கரலிங்கம், தொழிலதிபர் தவமணி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ரிஷப வாகனத்தில் வீதிஉலா
விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி- அம்பாள் திருவீதி உலா, கலைநிகழ்ச்சிகள், பக்தி சொற்பொழிவுகள் நடைபெறுகிறது. 10-ம் திருநாளான ஜூலை மாதம் 5-ந் தேதி காலையில் சுவாமி-அம்பாள் சப்பரத்தில் திருவீதி உலா, தொடர்ந்து தீர்த்தவாரி அபிஷேகம், தீபாராதனை, மாலையில் சுவாமி- அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதிஉலா ஆகியன நடைபெறுகிறது.
திருவிழா ஏற்பாடுகளை திருவாடுதுறை ஆதீனம் வைத்தியநாத தம்பிரான் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.