வீரதீர செயல்புரிந்த 5 பேருக்கு அண்ணா பதக்கம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்


வீரதீர செயல்புரிந்த 5 பேருக்கு அண்ணா பதக்கம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
x

வீரதீர செயல்புரிந்த5 பேருக்கு குடியரசு தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா பதக்கம் வழங்கினார்.

சென்னை,

குடியரசு தின விழா நிகழ்ச்சிகள், தமிழக அரசின் சார்பில் நேற்று சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே நடத்தப்பட்டன. அப்போது இந்த ஆண்டுக்கான வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை உரியவர்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதன் விவரம் வருமாறு:-

வீரதீர செயல்கள் புரிந்த அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் அண்ணா பதக்கங்களை அரசு வழங்கி வருகிறது. இந்த பதக்கம் பெறுவோருக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையும், ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட பதக்கம் மற்றும் சான்றிதழை 5 பேருக்கு முதல்-அமைச்சர் வழங்கினார்.

அரசு ஊழியர் பிரிவு

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அண்ணா பதக்கத்திற்கு அரசு ஊழியர் பிரிவில், சென்னை அமைந்தகரையில் ஏட்டாக பணியாற்றிய சரவணன் பெற்றார். அவர் 2021-ம் ஆண்டு ஜூலையில் ரோந்து பணியில் இருந்தபோது எம்.எம். காலனியில் குறுகிய சாலைக்குள் தீ விபத்து ஏற்பட்டபோது அங்கிருந்த கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் நீர் இறைத்தும், கியாஸ் சிலிண்டர் கசிவை ஈர போர்வை போர்த்தி மூடியும், தீயை அணைத்து 300 வீடுகளுக்கு தீ பரவுவதை தடுத்தார்.

2022-ம் ஆண்டு ஜனவரியில் ரோந்துப் பணியில் இருந்தபோது பாண்டி என்பவர் தெருவில் இறந்து கிடப்பதாக வந்த தகவலின்படி அங்கு உடனே சென்று, மார்பில் கைகளை வைத்து அழுத்தி சி.பி.ஆர். முறையில் முதலுதவி செய்தார். தொடர்ச்சியாக செய்த முதலுதவியின் பயனாக பாண்டி இருமியபடி எழுந்துள்ளார். உடனடியாக அவரை ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பினார். இந்த தன்னலமற்ற செயலுக்காக அவருக்கு பதக்கம் வழங்கப்பட்டு உள்ளது.

47 குழந்தைகளை மீட்டவர்

வேலூர் ஆண் செவிலியர் ஜெயக்குமார் பொன்னரசு, சென்னை கஸ்தூரிபா காந்தி தாய்சேய் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றியபோது 2021-ம் ஆண்டு மே மாதம் இரவில் தீ விபத்து ஏற்பட்டு புகை சூழ்ந்த நிலையில், பிறந்த குழந்தைகள் வைக்கப்பட்டு இருந்த பிரிவிலும், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மீதும் தீ பரவாமலும் இருக்க செயல்பட்டு, 12 தீயணைப்பு உருளைகளை பயன்படுத்தி, தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பே தீயை முழுவதுமாக அணைத்து விட்டார்.

அந்த வகையில் 47 பச்சிளம் குழந்தைகளையும், 11 தாய்மார்களையும் காப்பாற்ற துணிச்சலுடன் செயல்பட்ட அவருக்கு இந்த பதக்கம் வழங்கப்பட்டது.

பொதுமக்கள் பிரிவு

பொதுமக்கள் பிரிவில், தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் அந்தோணிசாமிக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. 2021-ம் ஆண்டு டிசம்பரில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி அடித்து செல்லப்பட்ட 3 சிறுவர்களில் 2 பேரை, தனது உயிரை பொருட்படுத்தாமல் காப்பாற்றினார்.

கன்னியாகுமரி காட்டுப்புத்தூரில் உலக்கை அருவியில் 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் குளிக்கச் சென்றனர். அப்போது திடீரென்று பெருவெள்ளம் ஏற்பட்டு 3 சிறுவர்கள் அடித்து செல்லப்பட்டனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணன் எந்தவித உபகரணமும் இல்லாமல் 3 சிறுவர்களையும் காப்பாற்றினார். அவருக்கும் உடல் நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அந்த துணிச்சலான செயலுக்காக ஸ்ரீகிருஷ்ணனுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.

தஞ்சை மாவட்டம் அலமேலுபுரத்தில் பூண்டிமாதா கோவிலுக்கு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 52 பேர் 2022-ம் ஆண்டு அக்டோபரில் சென்றனர். அவர்களில் 8 பேர் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச்சென்று ஆழம் தெரியாமல் சிக்கிக்கொண்டனர். உடனே அலமேலுபுரத்தைச் சேர்ந்த செல்வம் துணிச்சலுடன் ஆற்றில் இறங்கி 2 பேரை காப்பாற்றினார். அந்த துணிச்சலுக்காக அவருக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.

கோட்டை அமீர் விருது

இந்த ஆண்டுக்கான கோட்டை அமீர் மதநல்லிணக்கப் பதக்கம், கோவை மாவட்டம் கோட்டைமேடு எஸ்.எஸ்.கோவில் தெருவைச் சேர்ந்த இனயத்துல்லாவுக்கு வழங்கப்பட்டது. இவர் கோவை பகுதியில் மத நல்லிணக்கத்திற்காக பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறார். கடந்த 20 ஆண்டுகளாக அனைத்து சமுதாய மக்களிடமும் நட்புடன் பழகி, அங்கு ஏற்படும் பதற்றமான சூழ்நிலைகளின்போது போலீசுடன் இணைந்து பொது அமைதி மற்றும் மதநல்லிணக்கம் நிலவும் வகையில் பணியாற்றியுள்ளார்.

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவ, மாணவிகளுக்கு மத வேறுபாடின்றி நிதி உதவி வழங்கி, மத ஒற்றுமை, மனிதநேயம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இந்து, கிறிஸ்தவ மதகுருக்களுடன் இணைந்து மத நல்லிணக்கத்திற்காக பாடுபடுகிறார். மத நல்லிணக்கத்திற்காக தொடர்ந்து பணியாற்றுவதற்காக இனயத்துல்லாவுக்கு கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கம் வழங்கப்படுகிறது.

காந்தியடிகள் பதக்கம்

கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தியதில் மெச்சத்தக்க வகையில் பணியாற்றிய போலீசாருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு இந்த விருதை, சென்னை மாவட்டம் மத்திய நுண்ணறிவுப் பிரிவு தலைமையக ஆய்வாளர் பிரியதர்ஷினி, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் ஜெயமோகன், சேலம் மண்டலம் மத்திய நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர் சகாதேவன், விழுப்புரம் மண்டலம் மத்திய நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர் இனாயத் பாஷா, செங்கல்பட்டு மாவட்டம் அயல்பணி மத்திய நுண்ணறிவுப் பிரிவு தலைமைக் காவலர் சிவநேசன் ஆகியோர் பெற்றனர்.

சிறந்த 3 போலீஸ் நிலையம்

சிறப்பான பணி, குற்றங்களை குறைத்தல், உடனடி நடவடிக்கை ஆகிய செயல்பாட்டில் சிறந்த போலீஸ் நிலையத்திற்கான முதல் பரிசு கோப்பையை திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையம் பெற்றுள்ளது. பரிசு கோப்பையை முதல்-அமைச்சரிடம் இருந்து அதன் ஆய்வாளர் உதயகுமார் பெற்றுக்கொண்டார். 2-ம் பரிசை, திருச்சி கோட்டை போலீஸ் நிலையம் பெற்ற நிலையில் அதன் இன்ஸ்பெக்டர் தயாளனும்; 3-ம் பரிசை, திண்டுக்கல் வட்ட போலீஸ் நிலையம் பெற்றதை தொடர்ந்து அதன் இன்ஸ்பெக்டர் சேது பாலாண்டியும் பெற்றுக்கொண்டனர்.

திருத்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கடைபிடித்து அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருதை புதுக்கோட்டை மாவட்டம் ஆலவயலைச் சேர்ந்த வசந்தா பெற்றார். அவருக்கு ரூ.5 லட்சமும், ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பதக்கமும் வழங்கப்பட்டது.


Next Story