அனைத்து ஊராட்சிகளிலும் அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-கலெக்டர் விஷ்ணு தகவல்
நெல்லை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் அமல்படுத்தப்படும் என்று கலெக்டர் விஷ்ணு கூறினார்.
நெல்லை மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2022-2023-ம் ஆண்டு திட்ட செயலாக்கம் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்படும் ஊராட்சிகளில் அனைத்து கிராமங்களிலும் நீர்நிலைகளை பராமரித்தல், அரசு பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை உருவாக்குதல், அங்கன்வாடி கட்டிடங்கள், ரேஷன்கடை கட்டிடங்கள், ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடம் கட்டுதல், தெருக்களுக்கு காங்கிரீட் சாலை மற்றும் வண்ண கற்கள் சாலை அமைத்தல் போன்ற அடிப்படை வசதிகளுடன் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். தனிநபர் தேவைகள் பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் அட்டை வழங்குதல், முதியோர் ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட அரசு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மாவட்ட வருவாய் அலுவலர், சேரன்மாதேவி உதவி கலெக்டர் தலைமையில் வருவாய் கோட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடத்தி 91 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு முகாம் நடத்தி பொதுமக்கள் பயன்படும் திட்டங்களை வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, சேரன்மாதேவி உதவி கலெக்டர் ரிஷாப், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர், கிராம ஊராட்சி தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.