அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: 1,550 பேருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பட்டம் வழங்கினார்


அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: 1,550 பேருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பட்டம் வழங்கினார்
x

சென்னையில் நடந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் 43-வது பட்ட மளிப்பு விழாவில் 1,550 மாணவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பட்டம் வழங்கினார்.

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகத்தின் 43-வது பட்டமளிப்பு விழா சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி முன்னிலை வகித்தார். நிதி ஆயோக் துணை தலைவர் சுமன் பெரி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

சிவில் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், தகவல் மற்றும் தகவல்தொடர்பு என்ஜினீயரிங், தொழில்நுட்பம், கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல், அறிவியல் மற்றும் மனிதநேயம், நிர்வாக அறிவியல் உள்ளிட்ட படிப்புகளில் இளநிலை, முதுநிலை, எம்.பில், பி.எச்டி. நிறைவு செய்த 1,550 பேர் பட்டம் பெற்றனர். இவர்களில் 65 பேர் தங்கப்பதக்கம் பெற்றனர்.

1,550 பேருக்கு பட்டம்

கவர்னர் ஆர்.என்.ரவி சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக சற்றும் சளைக்காமல் நின்றபடி 1,550 பேருக்கு நேரடியாக பட்டங்களை வழங்கினார். இதில் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள், அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரி மாணவர்கள், அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரி மாணவர்கள் ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 25 ஆயிரத்து 113 பேர் நேற்று பட்டம் பெற்றனர்.

விழாவில் துணைவேந்தர் வேல்ராஜ் பேசும்போது, "நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 3 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். 5 ஆயிரத்து 200 மாணவர்களுக்கு 'டிரோன்' பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவிலான 275 நிறுவனங்களில் 1,400 இளநிலை பொறியியல் படித்த மாணவர்களும், 380 முதுநிலை பொறியியல் படித்த மாணவர்களும் பணிபுரிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ரூ.8½ லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை ஆண்டு வருமானம் கிடைக்கும் வகையில் வேலை கிடைத்துள்ளது" என்றார்.

பிரதமரின் கனவு

விழாவில், சுமன் பெரி பேசியதாவது:-

நிதி ஆயோக்கின் அறிக்கையின் படி 2015-2016 மற்றும் 2019-2021 ஆகிய ஆண்டுகளில் 13.55 கோடி இந்தியர்கள் வறுமை கோட்டுக்குமேலே வந்துள்ளனர். 2047-ம் ஆண்டில் 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற பிரதமரின் கனவு திட்டத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது. அடுத்த 30 ஆண்டுகளில் உலக அளவில் இந்தியாவில் உழைக்கும் வயதுடைய மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

1947-க்கு முந்தைய 25 வருடங்களில் இந்தியா அடைந்த வெற்றியை, அடுத்த 25 வருடங்களில் இந்தியா அடைய வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார். இந்திய இளைஞர்கள் ஆபத்தான சூழ்நிலைகளை கண்டு பயப்படுவதில்லை என்பதை நினைத்து பிரதமர் பெருமை கொள்கிறார். எங்கள் தலைமுறையில் அது குறைவாக இருந்தது. நம் நாட்டின் கலாசாரமும், குடும்ப கட்டமைப்பும் நம்மை அதற்கு தயார்படுத்தி உள்ளது.

தேசிய தகவல் ஆய்வு மையம்

மாநிலங்கள் விருப்பப்பட்டால் மாநில பல்கலைக்கழகங்களை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தி கொள்வதற்காக நிதி ஆயோக், 2022-23 முதல் 2024-25 வரையிலான 3 ஆண்டுகளுக்கு ரூ.238 கோடி ஒதுக்கியுள்ளது. நிதி ஆயோக் மூலம் தேசிய தகவல் ஆய்வு மையத்தை உருவாக்கி உள்ளோம். இதனை மாநில உதவித் திட்டம் மூலம் மாநிலங்கள் பயன்படுத்தி கொண்டு மாநில தகவல் ஆய்வு மையங்களை உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்துகொண்டோர்

விழாவில் உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் ஏ.கார்த்திக், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சக்திவேல் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடல்

பின்னர் பட்டமளிப்பு விழாவில் தங்க பதக்கம் வென்ற மாணவ, மாணவிகளுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.

அப்போது 2047-க்குள் பாரதத்தை 'விஸ்வகுரு' ஆக்கும் தேசிய கடமையில் விழிப்புடன் இருந்தபடி, பெரிய கனவுகளை காணவும், கடினமாக உழைத்தும், முன் எப்போதும் இல்லாத வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்துமாறும் அறிவுறுத்தினார்.


Next Story