சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்


ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாகப்பட்டினம்

சிக்கல்:

ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அன்னாபிஷேகம்

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தன்று சிவலிங்கத்துக்கு அன்னத்தால் அலங்காரம் செய்து வழிபடுவது வழக்கம். அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்பவர்கள் பூர்வஜென்ம பாவம், வறுமை நீங்கி எல்லாவளமும் பெறுவார்கள் என்பது ஐதீகம். அதன்படி நேற்று ஐப்பசி பவுர்ணமியையொட்டி நாகை மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் சிவலிங்கத்திற்கு அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடந்தது.

சிக்கல் சிங்காரவேலர் கோவில்

சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் உள்ள நவநீதேஸ்வரர் சாமிக்கு அன்னாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் முருகன், கோவில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதேபோல நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் காயாரோகணசாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது.

மேலமறைக்காடர் கோவில்

வேதாரண்யத்தை அடுத்த மறைஞாயநல்லூரில் அமைந்துள்ள மேல மறைக்காடர் கோவிலில் சிவனுக்கு அன்னாபிஷேகம் நடந்தது. முன்னதாக சிவனுக்கு பால், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் கோவில் பிரசாதம் தயார் செய்யப்பட்டு சிவனுக்கு சாத்தப்பட்டு, காய்கறி மாலைகளும் அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்களுக்கு கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட சாதம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story