சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்
ஐப்பசி பவுர்ணமியையொட்டி சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவெண்காடு:
ஐப்பசி பவுர்ணமியையொட்டி சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அன்னாபிஷேகம்
திருவெண்காடு அருகே நாங்கூர் கிராமத்தில் உள்ள நம்பி பிரியாள் சமேத நம்புவார்க்கு அன்பர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன் மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர்.இதேபோல் திருவெண்காடு சுவேதாரணேஸ்வரர் கோவில், அன்னப்பன் பேட்டை கலி காமேஸ்வரர் கோவில், மங்கை மடம் யோகநாத சுவாமி கோவில், சாயாவனம் சாயாவனேஸ்வரர் கோவில், பல்லவன் பல்லவனேஸ்வரர் கோவில், பழைய அகரம் வேதபுரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் நடந்தது.
திருக்கடையூர்
திருக்கடையூர் அருகே ஆக்கூரில் உள்ள வாள்நெடுங்கண்ணி சமேத தான்தோன்றீஸ்வரர் கோவில், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் அன்னாபிஷேகம் நடந்தது.மயிலாடுதுறை அருகில் கோடங்குடி கிராமத்தில் கார்கோடகநாதர் கோவிலில் கார்கோடகநாதருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடந்தது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சீர்காழி
சீர்காழி கடைவீதியில உள்ள நாகேஸ்வரமுடையார் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு நாகேஸ்வரமுடையாருக்கு 108 கிலோ அரிசி சாதத்தால் அபிஷேகம் செய்து வாழைப்பூ, பரங்கிக்காய், திராட்சை, ஆப்பிள், காய்கறிகள் உள்ளிட்டவைகளால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.சீர்காழி சட்டைநாதர் கோவில், சீர்காழி ஈசானிய தெருவில் உள்ள அக்னிபுரீஸ்வரர் கோவில், தென்பாதியில் உள்ள சிவன் கோவில், தாடாளன் வீதியில் உள்ள அண்டநாதர் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடந்தது.