கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் 7-ந் தேதி அன்னாபிஷேகம்


கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் 7-ந் தேதி அன்னாபிஷேகம்
x

உலகப்பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் வருகிற 7-ந் தேதி அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

அரியலூர்

பிரகதீஸ்வரர் கோவில்

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் கங்கை வரை படையெடுத்து வெற்றி பெற்றதின் அடையாளமாக மாமன்னன் ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திரசோழன் பிரகதீஸ்வரர் கோவிலை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டினார். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கோவிலில் ஒரே கல்லிலான நவக்கிரகம் மற்றும் சிவலிங்கம் உள்ளன.

இந்த கோவில் உலகப்பிரசித்தி பெற்று புராதன சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டு மத்திய அரசால் தொல்லியல்துறை பாதுகாப்புத்துறை மூலம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அன்னாபிஷேகம்

இந்த கோவிலில் சுமார் 60 அடி சுற்றளவும் 13.5 அடி உயரமும் கொண்ட ஒரே கல்லிலான சிவலிங்கத்திற்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இவ்வாறு அன்னாபிஷேகம் செய்யப்படும் போது 100 மூட்டை பச்சரிசியால் சாதம் சமைக்கப்பட்டு சிவலிங்கத்தின் மேல் சாத்தப்படும். இவ்வாறு சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் ஒவ்வொரு சிவலிங்கத்தின் தன்மையைக் கொண்டதாக கூறப்படுவது ஐதீகம். இதனால் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை ஒரே நேரத்தில் தரிசிப்பது கோடி புண்ணியம் கிடைக்கும் என்பதும் ஐதீகமாகும். எனவே இந்த ஆண்டு ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தன்று வருகிற 7-ந் தேதி அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.

ருத்ராபிஷேகம்

இதையொட்டி நாளை (சனிக்கிழமை) காலை 5 மணியளவில் கணக்க விநாயகருக்கு அபிஷேகமும், தீபாராதனையும், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு பிரகன் நாயகி அம்பாளுக்கும், பிரகதீஸ்வரருக்கு மகா அபிஷேகமும், நண்பகல் 12 மணிக்கு தீபாராதனையும், 7-ந்தேதி காலை 9 மணிக்கு பிரகதீஸ்வரருக்கு அன்னம் சாத்தப்படும். மாலையில் பலகாரங்கள் செய்து சாதத்தின் மேல் அழகாக அடுக்கி மலர் அலங்காரம் செய்து மாலை 6 மணியளவில் தீபாராதனையும், இரவு 8 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள சாதத்தினை ஆறு, ஏரி, குளங்களில் மீன்களுக்கு உணவாக அளிக்கப்படும்.

சந்திர கிரகணத்தையொட்டி 8-ந்தேதி காலை 10.30 மணிக்குள் ருத்ராபிஷேகமும், சண்டிகேஸ்வர பூஜையும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காஞ்சி சங்கரமட அன்னாபிஷேக கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


Next Story