தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூரில் தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கவுரவத் தலைவர் டி.கே.ராமு தலைமை வகித்தார். பொருளாளர் கோபி, துணை செயலாளர் ரஞ்சித்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் எம்.சுந்தரேசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
மாவட்டக்குழு உறுப்பினர் வேணுகோபால், எஸ்.ஆர்.தேவதாஸ், மாவட்ட துணை செயலாளர் நந்தி, தேவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தனியார்மய கொள்கைக்கு வழிவகை செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும், ஒப்பந்த பணியாளர்களுக்கு பி.எப்., இ.எஸ்.ஐ. வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் நகர துணை செயலாளர் ஆர்.வெங்கடேசன் நன்றி கூறினார்.