234 தொகுதிகளிலும் அண்ணாமலை 100 நாட்கள் பாதயாத்திரை: நிறைவு விழாவில் பிரதமர் பங்கேற்கிறார்
234 தொகுதிகளிலும் அண்ணாமலை 100 நாட்கள் பாதயாத்திரை செல்கிறார். ராமேஸ்வரத்தில் 28-ந்தேதி பாதயாத்திரையை மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்கிறார். நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கிறார்.
சென்னை.
தமிழகத்தில் பல அரசியல் கட்சி தலைவர்கள் நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். தற்போது, ஊழலற்ற, நேர்மையான, தூய்மையான வளர்ச்சியை தரக்கூடிய அரசு வர வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகிறார்கள். தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, ராமேஸ்வரத்தில் இருந்து "என் மண் என் மக்கள்", என்ற தலைப்பில் யாத்திரை மேற்கொள்கிறார். வருகிற 28-ந் தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இதனை தொடங்கி வைக்கிறார். அன்று பொதுக்கூட்டம் நடக்கிறது.
யாத்திரையின் 5 கட்டங்கள்
முதல் கட்டமாக ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 22-ந்தேதி வரை நடக்கிறது. 5 கட்டங்களாக நடைபெறும் இந்த யாத்திரை ஜனவரி மாதம் சென்னையில் முடிவடைகிறது. நூறு நாட்கள் நடைபெறும் யாத்திரையில் அண்ணாமலை கலந்து கொண்டு நடக்கிறார்.
யாத்திரையின் நோக்கம், ஊழலற்ற நேர்மையான, தூய்மையான வளர்ச்சியை தரக்கூடிய அரசாங்கம் வரவேண்டும். பிரதமர் நரேந்திர மோடி அரசின் 9 ஆண்டுகால சாதனைகள், வருகிற 2024-ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தை 3-வது முறை அமைக்க வேண்டும்
234 தொகுதிகளிலும்...
தி.மு.க.வின் ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சி முறைகள் அதனுடைய அவலங்களை மக்களிடம் சேர்க்கவும் உள்ளிட்டவைகளை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது. தமிழக பா.ஜ.க. வருகிற ஆண்டுகளில் எந்த திசையை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற நோக்கில் 'ராமேஸ்வர தீர்மானம்' வெளியிடப்படும். இந்த யாத்திரை தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள், 234 சட்டசபை தொகுதிகளையும் கடந்து செல்லும்.
அண்ணாமலை, நடை பயணமாகவும், வாகனங்கள் மூலமாகவும் மக்களைச் சந்திப்பார். பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு செய்த சாதனைகள் தொடர்பான 10 லட்சம் புத்தகங்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. பா.ஜ.க தலைவர் எழுதிய கடிதம் 1 கோடி குடும்பங்களுக்கு கொண்டு சேர்க்க திட்டமிட்டு உள்ளோம்.
தமிழ் தாய்க்கு முழு உருவச்சிலை
தமிழகத்தில் 11 பிரமாண்டமான பொதுக்கூட்டங்கள் நடைபெறும். இதில், மத்திய மந்திரிகள் மற்றும் தேசிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். 100-க்கும் மேற்பட்ட தெருமுனை பிரசார கூட்டங்களிலும் அண்ணாமலை பேசுகிறார். கிராம சபை கூட்டங்களில் பங்கேற்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு உள்ளோம். யாத்திரையின் போது, முக்கிய நகரங்களில் இருந்து புனித மண் சேகரித்து தமிழ் தாய்க்கு முழு உருவச்சிலை செய்ய திட்டமிட்டு உள்ளோம்.
யாத்திரை முடிவில் தமிழக சரித்திரத்தில் புதிய அத்தியாயத்தை எழுதக்கூடிய நாளாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. யாத்திரை முடிந்த பிறகு, தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதியை தேசிய ஜனநாயக கூட்டணியை கைப்பற்றும். அதற்கு யாத்திரை அரசியல் திருப்புமுனையாக இருக்கும்.
தமிழகத்திற்கு ஒளி ஏற்றக்கூடிய...
யாத்திரையில் தன்னார்வ தொண்டர்கள் பங்கேற்க வேண்டும். இது கட்சிக்கான யாத்திரை அல்ல 8 கோடி தமிழர்களான யாத்திரை, இதனை தமிழக மக்கள் திருவிழாவாக வரவேற்று கொண்டாட வேண்டும். யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க வாய்ப்பு உள்ளது. 1967-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை தமிழக மக்கள் எவ்வாறு ஏமாற்றப்பட்டு இருகிறார்கள்? என்பதை மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் புகார் பெட்டி
மாநில தலைவர் அண்ணாமலையுடன் யாத்திரையில் உடன் கொண்டு செல்லப்படும் மக்கள் புகார் பெட்டியை சட்டமன்ற பா.ஜ.க. குழு தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. ஆகியோர் அறிமுகப்படுத்தினர். அதில் பொதுமக்கள் புகார்களை போடலாம் என்றும் கூறப்பட்டது. மக்கள் புகார் பெட்டியில், விடியல, முடியல மற்றும் நில அபகரிப்பு, ஊழல், மணல் கடத்தல், நிர்வாக திருட்டு, போலி வாக்குறுதி என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தது.
பேட்டியின்போது முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, எம்.சக்கரவர்த்தி, பொறுப்பாளர்கள் கே.எஸ்.நரேந்திரன், எஸ்.அமர் பிரசாத் ரெட்டி மற்றும் செயற்குழு உறுப்பினர் ரா.பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.