அண்ணாமலை பல்கலைக்கழகம் தான் திராவிட மாடலுக்கான முன்னோடி அமைச்சர் பொன்முடி பேச்சு


அண்ணாமலை பல்கலைக்கழகம் தான் திராவிட மாடலுக்கான முன்னோடி அமைச்சர் பொன்முடி பேச்சு
x

அண்ணாமலை பல்கலைக்கழகம் தான் திராவிட மாடலுக்கான முன்னோடி என சிதம்பரத்தில் தமிழியல் துறை ஆய்வரங்க நிறைவு விழாவில் அமைச்சர் பொன்முடி கூறினார்.

கடலூர்

அண்ணாமலைநகர்,

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தமிழியல் துறை சார்பில் அரசர் முத்தையவேள் ஆய்வரங்கத்தின் நிறைவு விழா நேற்று மாலை பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடைபெற்றது. இதற்கு அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசன் தலைமை தாங்கினார்.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், அண்ணாமலை பல்கலைக்கழக இணைவேந்தருமான க.பொன்முடி கலந்து கொண்டு பேசியதாவது:-

எல்லா ஊர்களிலும் கல்லூரி

நானும் இந்த பல்கலைக்கழகத்தில் படித்ததற்காக பெருமை அடைகிறேன். நான் படித்தபோது போது ஒருங்கிணைந்த தென் ஆற்காடு மாவட்டத்தில் படிப்பதற்கு அண்ணாமலை பல்கலைக்கழகம் மட்டும் தான் இருந்தது. அந்த காலம் மாறி இன்று எல்லா ஊர்களிலும் கல்லூரிகள் உள்ளன. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சிறப்பு. இந்த பல்கலைக்கழகம் தான் திராவிட மாடலுக்கான முன்னோடி.

தமிழை வளர்த்த இந்தப் பல்கலைக்கழகம் இல்லை என்றால் நாங்கள் படித்திருக்க முடியாது. 1929-ம் ஆண்டு அண்ணாமலை செட்டியார் இப்பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். கல்வியோடு தமிழையும், இசையையும் வளர்த்த முத்தையா செட்டியார் பெயரில் ஆய்வரங்கம் நடத்தப்படுவது சிறப்பு. நாங்கள் படிக்கும்போது பெண்கள் மிகவும் குறைவாக படித்தனர். இப்போது அந்த நிலை மாறி பெண்கள் தான் அதிகமாக படித்து வருகின்றனர். இதுதான் திராவிட மாடல் அரசின் சாதனை.

பெண்களின் உயர்கல்வி உயர்வு

6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்-அமைச்சா் கொண்டு வந்த பிறகு பெண்களின் உயர்கல்வி 29 சதவீதம் உயர்ந்துள்ளது. படிக்கும் போதே மாணவர்கள் சில தொழில்களை கற்றுக் கொண்டு வேலை பெறுவதை விட, வேலை கொடுப்பவராக மாற வேண்டும் என்பதுதான் நான் முதல்வன் திட்டத்தின் நோக்கம்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை கொண்டு வந்தது திராவிட மாடல் ஆட்சி. நாங்கள் இந்து மதத்தினருக்கு எதிரானவர்கள் அல்ல. கடவுளின் பெயரால் ஏற்ற தாழ்வுகள் இருக்க கூடாது என்பது தான் நோக்கம். இன்று திருமண விழாக்களில் உச்சரிக்கப்படும் மந்திரம் யாருக்கும் புரிவதில்லை. திருமணங்கள் தமிழில் நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவர்களுக்கு சான்றிதழ்

தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் பொன்முடி சான்றிதழ் வழங்கினார்.

முன்னதாக இந்திய மொழிப்புல முதல்வர் பேராசிரியர் அரங்க பாரி வரவேற்றார். பல்கலைக்கழகத்தில் படிக்கும் இலங்கை மாணவி ஆன்மேரி தனுஷிகா, தமிழ்த் துறை மாணவர்கள் மாதேஸ்வரன், ராஜதுரை ஆகியோர் பேசினார்கள். முடிவில் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் இரா.சிங்காரவேல் நன்றி கூறினார்.


Next Story