அண்ணாமலை பல்லைக்கழக மாணவர்கள் தர்ணா


அண்ணாமலை பல்லைக்கழக மாணவர்கள் தர்ணா
x
தினத்தந்தி 25 July 2023 12:15 AM IST (Updated: 25 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து, அண்ணாமலை பல்லைக்கழக மாணவர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

கடலூர்

அண்ணாமலைநகர்

மாணவர்கள் போராட்டம்

மணிப்பூர் கலவரம் மற்றும் அங்கு 2 பெண்களுக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மத்திய அரசை கண்டித்து அரசியல் கட்சியினரின் போராட்டங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமா கோவில் அருகே திரண்ட மாணவ, மாணவிகள் மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்தும், இந்த சம்பவத்தை தடுக்க தவறிய மத்திய பா.ஜ.க. அரசு, மணிப்பூர் மாநில அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்கள் வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தி்ல் ஈடுபட்டனர்.

மணிப்பூரை காப்பாற்ற வேண்டும்

மேலும், மணிப்பூருக்கும், அங்கு பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் நீதி வேண்டும், மணிப்பூரை காப்பாற்ற வேண்டும் என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை போராட்டத்தில் பங்கேற்ற மாணவ,மாணவிகள் கையில் பிடித்து இருந்தனர்.

போராட்டத்தில் இந்திய மாணவர் சங்க மாநில குழு உறுப்பினர் குமரவேல், மாவட்ட செயலாளர் ஆகாஷ், மாவட்ட தலைவர் சிவானந்தன் ஆகியோர் கலந்து கொண்டு, பேசினர்.

சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், தாமாகவே அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story