அடிப்படை வசதிகள் இல்லாத அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளி
அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள் மற்றும் போதுமான வகுப்பறை கட்டிடங்கள் இல்லாததால் மாணவர்கள் தரையிலும் மரத்தடியிலும் அமர்ந்து படிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு பள்ளி தரம் உயர்த்தப்படுமா? என்று மாணவர்கள், பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
அரசு மேல்நிலைப்பள்ளி
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 575 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் அடிப்படை வசதிகளான வகுப்பறைகள், கழிவறை, குடிநீர், மின்சாரவசதி, ஆய்வகவசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இல்லாததால் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.
பள்ளியின் பின்புறத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வகுப்பறைகள் சேதமடைந்து மாணவர்கள் கல்விபயில லாயக்கற்றதாக உள்ளது. மேலும் வகுப்பறையில் உள்ள மின்விசிறி, சுவிட்ச் பாக்ஸ்கள் அனைத்தும் உடைந்து ஒயர்கள் எந்த நேரமும் தொங்கிக்கொண்டுதான் உள்ளது. இதனால் மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையே உள்ளது. மழை காலங்களில் கட்டிடங்களில் மழை தண்ணீர் கசிவு ஏற்பட்டு மாணவர்களது பாடபுத்தகங்கள் நனைந்து விடுவதாகவும், மாணவர்களும் மழையில் நனைந்து விடுவதாகவும் தெரிவித்தனர்.
அடிப்படை வசதிகள்
மேலும் அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளி புதுக்கோட்டை இலுப்பூர் சாலையில் மெயின் ரோட்டின் மையப்பகுதியில் இருப்பதால் அன்னவாசலை சுற்றியுள்ள பல்வேறு கிராம பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் இந்த பள்ளியை தேர்வு செய்து படித்து வருகின்றனர். ஆனால் இந்த பள்ளியில் சரியான கட்டிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே மாணவ-மாணவிகளின் நலன் கருதி அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரத்தை உயர்த்த வேண்டும் என பொதுமக்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-
புதிய வகுப்பறை கட்டிடங்கள்
சமூக ஆர்வலர் எடிசன்:- அன்னவாசல் அரசுமேல்நிலைப்பள்ளியில் அதிகமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் அதிகமான கட்டிடங்கள் சேதம் அடைந்து உள்ளது. குறிப்பாக மாணவ-மாணவிகளுக்கு கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. வகுப்பறை கட்டிடங்களும் மிகவும் சேதமடைந்து எந்த நேரத்திலும் சிமெண்டு பூச்சுகள் விழுந்துகொண்டே இருக்க கூடியதாகவே உள்ளது. பழைய வகுப்பறை கட்டிடங்களை அகற்றிவிட்டு புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டிக்கொடுக்க வேண்டும். பள்ளி மாணவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய அரசு முன்வர வேண்டும்.
அதிகாரிகள் கவனத்திற்கு...
மீராமொய்தீன்:- தற்போதுள்ள சூழலில் அரசு பள்ளியை தேடி பெரும்பாலான மக்கள் நாடிவரும் நிலை உள்ளது. இந்தநிலையில், அரசு பள்ளிகளை நவீன கலத்திற்கு ஏற்ப புதிய கட்டமைப்புகளுடன் கூடிய புதிய பள்ளி கட்டிடங்களை அமைத்து தருவது அரசின் கடமையாகும். இதனை துறைசார்ந்த அதிகாரிகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
சரி செய்ய வேண்டும்
மாணவியின் தந்தை ஆனந்த்:- பள்ளி வளாகத்திற்குள் உள்ள பயனற்ற கட்டிடங்களை இடித்து அகற்றிவிட்டு புதிய கான்கிரீட் கட்டிடங்களை கட்டிதர வேண்டும். இதுகுறித்த கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இதற்கான ஏற்பாடுகளை அரசு செய்யவில்லை. பள்ளியில் உள்புறம் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் பல வருடமாக மிகவும் சேதம் அடைந்து மாணவர்கள் படிப்பதற்கு லாயக்கற்றுள்ளது. எனவே இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.