ஆதிநாராயண சுவாமி கோவிலில் ஆனித்திருவிழா கொடியேற்றம்
களக்காடு ஆதிநாராயண சுவாமி கோவிலில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூர் ஆதிநாராயண சுவாமி கோவிலில் ஆனி மாத தேரோட்ட திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, நாராயண சுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விசேஷ பணிவிடைகளும் நடத்தப்பட்டது. தொடர்ந்து கோவில் மூலஸ்தானத்தில் இருந்து பக்தர்கள் கொடி பட்டத்தை எடுத்து வந்து, கோவிலை சுற்றி வந்தனர். பின்னர் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழா நாட்களில் நாராயண சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வருகிறார். 8-ம் திருநாளான வருகிற 8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணிக்கு நாராயண சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி, பால் கிணற்றின் அருகே பரிவேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) மதியம் தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.