மகளிருக்கு ரூ.1 லட்சம் கடன் தருவதாக அறிவிப்பு
வாணியம்பாடியில் மகளிருக்கு ரூ.1 லட்சம் கடன் தருவதாக கூறி அறிவிக்கப்பட்டதால் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாணியம்பாடியில் மகளிருக்கு ரூ.1 லட்சம் கடன் தருவதாக கூறி அறிவிக்கப்பட்டதால் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ரூ.1 லட்சம் கடன்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி - பெருமாள்பேட்டை பகுதியில் சிவாலயா பவுண்டேசன் என்ற பெயரில் புததாக மகளிர் சுய உதவி தொடங்குவதாகவும், இதன் மூலம் மகளிர் குழுக்களுக்கு ரூ.1 லட்சம் கடன் வழங்குவதாக சேலத்தைச் சேர்ந்த நபர்களும், பெருமாள் பேட்டை பகுதியைச் சேர்ந்த நபரும் இணைந்து அறிவித்திருந்தனர்.
இதனையடுத்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் அறிவிக்கப்பட்ட இருந்த இடத்தில் திடீரென கூடினர். இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக வாணியம்பாடி டவுன் போலீசாருக்கும், வருவாய் துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர்.
போலீசார் விசாரணை
ஏனெனில் ஏற்கனவே வாணியம்பாடி பகுதியில் இதுபோன்று குழுக்களை தொடங்கி பலர் திடீரென பணத்தை வசூலித்துக் கொண்டு தலைமறைவாகிவிட்டனர், கோணாமேடு பகுதியில் 2 கோடி ரூபாய் வரையில் இதே போல் வசூலித்துவிட்டு, அலுவலகத்தை பூட்டிவிட்டு தப்பி ஓடி விட்டதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.
அதன் அடிப்படையில் போலீசாரும், வருவாய்த் துறையினரும் விரைந்து வந்து அவர்களிடம் உரிய ஆவணங்கள் இருக்கிறதா என விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் முறையாக எவ்வித பதிவேடுகளையும் காண்பிக்காததால் அரசின் உரிய அனுமதி பெற்ற பின்பு தான் இது போன்ற மகளிர் சுய உதவி குழுக்களை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தி அவர்களை அங்கிருந்து வெளியேற்றி அனுப்பி வைத்தனர். பின்னர் கூடிய இருந்த பெண்களையும் அங்கிருந்து கலைந்து போகும்படி கூறினர்.
இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.