குளோபல் இன்டர்நேஷனல் பள்ளியில் ஆண்டு விழா
குளோபல் இன்டர்நேஷனல் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
பொன்னமராவதி அருகே தெக்கூர் அடுத்துள்ள கோவில்பட்டியில் குளோபல் இன்டர்நேஷனல் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 7-வது ஆண்டு விழா நடைபெற்றது. ஆண்டு விழாவிற்கு பள்ளியின் தாளாளர் பேராசிரியர் காந்தி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான சுரேகா சுந்தர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவரும் வகையில் நடைபெற்றது. தொடர்ந்து ஜெ.இ.இ. மற்றும் சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வில் சாதனைகள் படைத்த மாணவ- மாணவிகளுக்கு கேடயங்களும், சான்றிதழ்களும் சிறப்பு விருந்தினர் வழங்கி பாராட்டினார். மேலும் கடந்த ஆண்டு சி.பி.எஸ்.இ. போர்டு தேர்வில் கல்வி மாவட்டத்தின் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் அறிவொளி பிரபாகரனுக்கு ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகையுடன் கேடயமும் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் கடந்த கல்வியாண்டில் வகுப்பு வாரியாக தேர்வு செய்யப்பட்ட சிறந்த 5 மாணவர்களுக்கு சான்றிதழ்களும், கேடயமும் வழங்கப்பட்டது. இந்த விழாவில் பெற்றோர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் இயக்குனர்கள் ராஜமூர்த்தி, பிரசன்னா, உமா மகேஸ்வரி, பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.