விடுதலை செய்த நெல்லை கோர்ட்டின் உத்தரவு ரத்து - வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


விடுதலை செய்த நெல்லை கோர்ட்டின் உத்தரவு ரத்து - வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

விடுதலை செய்த நெல்லை கோர்ட்டின் உத்தரவை ரத்து செய்து வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது

மதுரை

-

நெல்லை மாவட்டம் ஏர்வாடி போலீஸ் நிலையத்திற்கு உள்பட்ட பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ்(வயது 29). இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இந்த தகவலை அறிந்த பெண்ணின் உறவினர்கள், முத்துராஜை கண்டித்தனர். ஆனாலும் பெண்ணுடன் தொடர்ந்து பழகி வந்தார். இந்தநிலையில் கடந்த 2012-ம் ஆண்டில் முத்துராஜ் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக சதீஷ், சுரேஷ், நாராயண செல்வம், மதிஷ், வெங்கடேஷ், ஜவகர்பாபு ஆகியோரை ஏர்வாடி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நெல்லை மாவட்ட கோர்ட்டு, கைதானவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று கூறி 6 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து இறந்த முத்துராஜின் உறவினர் சந்திரா, மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் ஆகியோர் விசாரித்தனர். முடிவில், கொலைக்கான விரோதம் குறித்து அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டு உள்ளது. இதை, குறுக்கு விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் மறுக்கவில்லை. முத்துராஜ் கொலை செய்யப்பட்டதற்கான மருத்துவ ஆதாரங்களும் உள்ளன.

ஆனால் கொலைக்கான சதி குறித்த காரணங்களை சம்பந்தப்பட்ட கீழ் கோர்ட்டு ஏற்கவில்லை. முதல் குற்றவாளியான சதீஷ் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க போதுமான காரணங்கள் இருந்தும் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். எனவே அவரை விடுதலை செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. சதீசுக்கு மட்டும் ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. வருகிற 30-ந்தேதிக்குள் அவர் கீழ் கோர்ட்டில் ஆஜராகி, தண்டனை காலத்தை கழிக்க வேண்டும். மற்றவர்களை விடுதலை செய்தது உறுதி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story