மேலும் 15 வீடுகள் இடிந்து விழுந்தன


மேலும் 15 வீடுகள் இடிந்து விழுந்தன
x

குமரியில் பெய்த கனமழைக்கு மேலும் 15 வீடுகள் இடிந்து விழுந்தன.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரியில் பெய்த கனமழைக்கு மேலும் 15 வீடுகள் இடிந்து விழுந்தன.

கனமழை

குமரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. கொட்டி தீர்த்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.

அதிலும் முன்சிறை ஊராட்சிக்குட்பட்ட மங்காடுபகுதியில் இருந்து முன்சிறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்லும் சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மழை நீர் தேங்கி குளம்போல காட்சி அளிக்கிறது. இதனால் சாலையின் இருபுறமும் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிப்பவர்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குழித்துறை தாமிரபரணி ஆறு, வள்ளியாறு, பரளியாறு, பழையாறு, கோதையாறு உள்ளிட்ட ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக கரையோர பகுதியில் உள்ள குடியிருப்புகளிலும், விளை நிலங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. விவசாயிகள் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

பிள்ளைதோப்பு வின்சென்ட் நகர் பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்த மழைநீரை பெண்கள் வெளியேற்றினர்.

மேலும் 15 வீடுகள் இடிந்தன

குமரி மாவட்டத்தில் நேற்று மேலும் 15 வீடுகள் இடிந்தன. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் நாகர்கோவில் கோட்டார் குறுந்தெருவில் ஒரு வீடு உள்பட 3 வீடுகளும், தோவாளை தாலுகாவில் 7 வீடுகளும், கல்குளம், விளவங்கோடு, திருவட்டார் ஆகிய தாலுகாக்களில் தலா ஒரு வீடும், கிள்ளியூர் தாலுகாவில் 2 வீடுகளும் இடிந்தன. நேற்று முன்தினம் 12 வீடுகள் இடிந்து விழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை மொத்தம் 27 வீடுகள் இடிந்து உள்ளன.

அகஸ்தீஸ்வரம், கல்குளம், திருவட்டார், கிள்ளியூர் ஆகிய தாலுகாக்களில் மேலும் 12 மரங்கள் வேரோடு சாய்ந்தன. அகஸ்தீஸ்வரம் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் 3 மின்கம்பங்கள் சேதம் அடைந்தன. அதைத்தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

மலையோர பகுதிகளில் கொட்டி தீர்த்து வரும் மழையினால் ரப்பர் தோட்டங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. ரப்பர் மரங்களில் கட்டப்பட்டுள்ள சிரட்டைகளிலும் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் ரப்பர் பால் வடிக்கும் தொழில் அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது.


Next Story