மாநில தலைவா் மீது மீண்டும் தாக்குதல்: தமிழகத்தில் இன்று ரேஷன் கடைகளை அடைத்து போராட்டம் கடலூரில் கு.பாலசுப்பிரமணியன் பேட்டி
சிதம்பரத்தில் நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில தலைவர் மீண்டும் தாக்கப்பட்டதை கண்டித்து, தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) ரேஷன் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கடலூரில் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம்,
சிதம்பரம் லால்கான் தெருவில் வசித்து வருபவர் ஜெயச்சந்திர ராஜா(வயது 56). இவர் தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில தலைவராக இருந்து வருகிறார். நேற்று காலை 10 மணியளவில் ஜெயச்சந்திர ராஜா, சிதம்பரம் மெய்காவல் தெருவில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர், திடீரென ஜெயச்சந்திர ராஜாவை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால், அவரை வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த ஜெயச்சந்திர ராஜா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
வலைவீச்சு
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயச்சந்திர ராஜாவை கத்தியால் வெட்டியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
2-வது சம்பவம்
ஜெயச்சந்திர ராஜா கடந்த மாதம் 21-ந்தேதி சிதம்பரம் மானா சந்து பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அவரை மர்மநபர்கள் 2 பேர் வழிமறித்து பீர்பாட்டிலால் தாக்கி உள்ளனர். அந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை இதுவரை போலீசாா் கைது செய்யாத நிலையில், தற்போது அவர் மீது 2-வது முறையாக தாக்குதல் நடந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று கடைகள் அடைப்பு
இதற்கிடையே தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கடலூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ஜெயச்சந்திர ராஜாவை கடந்த மாதம் 21-ந் தேதி இரவு மர்மநபர்கள் தாக்கியது குறித்து போலீசில் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் நேற்று பட்டப்பகலிலேயே அவரை வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளனர். ஆனால் இதுவரை இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவர்களை தூண்டி விட்டவர்களை போலீசார் கைது செய்யவில்லை.
நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில தலைவரை திட்டமிட்டே மர்மநபர்கள் மீண்டும் மீண்டும் தாக்கி வருகின்றனர். எனவே தமிழக அரசின் உள்துறை செயலாளர் இதில் தலையிட்டு, தாக்குதலில் ஈடுபட்டவர்களை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயச்சந்திர ராஜாவின் குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் மாநில தலைவர் தாக்கப்பட்டதை கண்டித்து நாளை (அதாவது இன்று வியாழக்கிழமை) தமிழகம் முழுவதும் உள்ள 30 ஆயிரம் ரேஷன் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.