கைதான கவுன்சிலர் மீது மற்றொரு வழக்கு
கைதான கவுன்சிலர் மீது மற்றொரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சிவகாசி,
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகாவை சேர்ந்தவர் தனபாண்டியன் (வயது 48). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான இடம் திருத்தங்கல் திருவள்ளுவர் காலனியில் உள்ளது. இந்த இடத்தை விற்பனை செய்ய முயன்ற போது அதற்கு அதே பகுதியை சேர்ந்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாநகராட்சி கவுன்சிலர் அசோக்குமார், நிர்வாகிகள் செல்வா, மனோஜ்குமார் என்கிற மனிதநேயன், தங்கராஜ், மோகன் ஆகியோர் தடுத்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 13-ந்தேதி தனபாண்டியனை மிரட்டி ரூ.3 லட்சம் பணம் பறித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனபாண்டியன் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் பேரில் மேற்படி 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உட்கட்சி பூசல் விவகாரத்தில் தலித்ராஜா என்பவரை தாக்கிய வழக்கில் மாநகராட்சி கவுன்சிலர் அசோக்குமார், செல்வா, தங்கராஜ் ஆகியோரை ஏற்கனவே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.