போலி நகைகள் கொடுத்து பண மோசடி: குமரியில் தலைமறைவாக உள்ள இளம்பெண் மீது மேலும் ஒரு புகார்


போலி நகைகள் கொடுத்து பண மோசடி: குமரியில் தலைமறைவாக உள்ள இளம்பெண் மீது மேலும் ஒரு புகார்
x

குமரியில் போலி நகைகள் கொடுத்து பண மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள இளம்பெண் மீது மேலும் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை,

குமரியில் போலி நகைகள் கொடுத்து பண மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள இளம்பெண் மீது மேலும் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

டிப்-டாப் பெண்

திங்கள்சந்தை அருகே உள்ள தலக்குளம் புதுவிளை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகன் ஜெனின் (வயது 38). இவர் திங்கள்சந்தை அருகே உள்ள ஆரோக்கியபுரத்தில் அடகு கடை நடத்தி வருகிறார்.

இவரது கடையில் கடந்த மே மாதம் 3-ந்தேதி டிப்-டாப்பாக வந்த பெண் ஒருவர் 19.350 கிராம் கொண்ட ஒரு தங்க வளையலை அடகு வைத்து ரூ.68 ஆயிரம் பெற்றுச் சென்றார். முகவரி சான்று எதுவும் கொடுக்காமல் பெயர் சந்தியா என்றும், கணவர் பெயர் விஜி, செட்டிதெரு இரணியல் என முகவரியை மட்டும் வாய்மொழியாக கொடுத்துள்ளார்.

5 பவுன் போலி நகைகள்

கடந்த 6-ந்தேதி ஜெனின் கடையில் இல்லை. அவரது தம்பி மட்டும் இருந்தார். அப்போது, ஒரு பெண் வந்து 21.5 கிராம் எடை கொண்ட 2 தங்க வளையல்களை கொடுத்து ரூ.75 ஆயிரம் பெற்றுள்ளார்‌. அப்போது அவருடைய பெயர் சைலஜா எனவும், கணவர் பெயர் சஜீவ், கோகுலம், இரணியல் மெயின்ரோடு என முகவரி கொடுத்து விட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில் சமீபகாலமாக நகைகளில் மோசடி நடந்து வருவது குறித்து நாளிதழ்கள், சமூக வலைதளங்களில் வெளியானதை அறிந்த ஜெனின், அந்த டிப்-டாப் பெண் கொடுத்த நகைகளை சோதனை செய்துள்ளார். அப்போது, அந்த நகைகள் அனைத்தும் செம்பு கம்பிகள் தங்க முலாம் பூசப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த பெண் போலி நகையை அடகு வைத்து மோசடி செய்தது தெரியவந்தது. மேலும், 5 பவுன் எடை கொண்ட 2 போலி நகைகளையும் வைத்து மோசடி செய்ததும் ஒரே பெண் என்பதும் தெரியவந்தது.

நாகர்கோவிலை சேர்ந்த...

பின்னர், இதுகுறித்து ஜெனின் இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட பெண் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், போலி நகையை கொடுத்து ஏமாற்றிய டிப்-டாப் பெண் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஜேசுராஜாவின் மனைவி அனுஷா (32) என்பது தெரியவந்தது. இவர் தக்கலை, கருங்கல் பகுதிகளில் இதேபோல் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. போலி நகை கொடுத்து பணம் மோசடி தொடர்பாக இளம்பெண் மீது தொடர்ந்து போலீசில் புகார் கூறப்பட்டு வருவதால் அவரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Next Story