பா.ஜனதாவுடன் மோதல் விவகாரம்:மேலும் ஒரு காங்கிரஸ் நிர்வாகி கைது
நாகர்கோவிலில் பா.ஜனதா-காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலில் மேலும் ஒரு காங்கிரஸ் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் பா.ஜனதா-காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலில் மேலும் ஒரு காங்கிரஸ் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
பா.ஜனதா-காங்கிரசார் மோதல்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து நாகர்கோவிலில் உள்ள பா.ஜனதா அலுவலகம் முன்பு காங்கிரசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு மறியலில் ஈடுபட்டு மோடிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
அப்போது அங்கு திரண்டிருந்த பா.ஜனதா நிர்வாகிகளுக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
மேலும் ஒருவர் கைது
இந்த மோதல் தொடர்பாக பா.ஜனதா சார்பில் காங்கிரஸ் நிர்வாகிகள் 31 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதேபோல பா.ஜனதாவை சேர்ந்த 22 பேர் மீது காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்தனர். மேலும் பா.ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ், நெல்லை மாவட்ட முன்னாள் தலைவர் மகாராஜா, மாவட்ட துணைத்தலைவர் சொக்கலிங்கம் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதேபோல காங்கிரஸ் நிர்வாகிகள் டைசன் மற்றும் ஜெலின் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே மோதலில் படுகாயமடைந்த இளைஞர் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் தலைமையில் போலீசார் சிகிச்சையில் இருந்து குணமடைந்த லாரன்சை ஆஸ்பத்திாி வளாகத்தில் வைத்து கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.