அருவங்காடு தொழிற்சாலையில் மீண்டும் வெடி விபத்து


அருவங்காடு தொழிற்சாலையில் மீண்டும் வெடி விபத்து
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-25T00:16:31+05:30)

அருவங்காடு தொழிற்சாலையில் இரும்பு கம்பிகளுக்கு வெல்டிங் வைத்தபோது வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

நீலகிரி

குன்னூர்

அருவங்காடு தொழிற்சாலையில் இரும்பு கம்பிகளுக்கு வெல்டிங் வைத்தபோது வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

அருவங்காடு தொழிற்சாலை

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள அருவங்காட்டில் மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான வெடி மருந்து தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ராணுவத்துக்கு தேவையான வெடி பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதற்கிடையில் கடந்த 19-ந் தேதி அதிகாலையில் தொழிற்சாலையில் உள்ள சிடி பிரிவில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு, ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வெல்டிங் வைக்கும் பணி

இந்த நிலையில் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட டி.எஸ்.சி. என்ற தொழில் பாதுகாப்பு படை அலுவலகம் உள்ளது. இதன் அருகில் நேற்று காலை 11 மணியளவில் கொட்டகை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்த பணியில் சிப்பாய்களான கேரளாவை சேர்ந்த எம்.வி.மனோஜ்(வயது 50), மத்திய பிரதேசத்தை சேர்ந்த இமாம் சூமண்டேல்(42) ஆகியோர் ஈடுபட்டனர். அவர்கள் இரும்பு குழாய்களுக்கு வெல்டிங் வைக்கும் பணியை மேற்கொண்டு இருந்தனர்.

தீவிர சிகிச்சை

அப்போது குழாயில் இருந்த சிறிய அளவிலான வெடி மருந்தில் தீப்பொறி விழுந்து திடீரென வெடித்து சிதறியது. இதில் எம்.வி.மனோஜ், இமாம் சூமண்டேல் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இதை கண்ட தொழில் பாதுகாப்பு படையினர் அவர்களை மீட்டு தொழிற்சாலை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தொழிற்சாலையின் மக்கள் தொடர்பு அதிகாரி எஸ்.கே.சிக்காலி கூறும்போது, இந்த விபத்து வெடி மருந்து தயாரிக்கும் பகுதியில் நடைபெறவில்லை. மற்ற தொழிலாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்றார்.


Next Story