கிராம நிர்வாக அலுவலர் கொலையில் மேலும் ஒருவர் கைது


தினத்தந்தி 27 April 2023 12:15 AM IST (Updated: 27 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முறப்பநாடு அருகே கிராம நிர்வாக அலுவலர் கொலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கொலை தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

படுகொலை

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டியாபுரத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (வயது 55).

இவர் நெல்லையை அடுத்த முறப்பநாடு அருகே கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் அவர் வழக்கம்போல் அலுவலகத்திற்கு வந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். மதியம் 12 மணி அளவில் 2 பேர் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிசை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அங்கிருந்து வெளியே ஓடிவந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக முறப்பநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லூர்து பிரான்சிஸை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

2 பேர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், தாமிரபரணி ஆற்றில் இருந்து மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்ட விவகாரத்தில் லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் கொலை தொடர்பாக நேற்று முன்தினம் கலியாவூரை சேர்ந்த ராமசுப்பிரமணியன் (40) என்பவரை முறப்பநாடு போலீசார் கைது செய்தனர். மேலும் ராமசுப்பிரமணியன் உறவினர் முருகன் மகன் மாரிமுத்து (32) என்பவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று தாழையூத்து பகுதியில் மாரிமுத்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். கைதான 2 பேரும் கூலித்தொழிலாளர்கள்.

12 வழக்குகள்

கைது செய்யப்பட்ட ராமசுப்பிரமணியன் மீது மணல் கடத்தல் உள்ளிட்ட 12 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கொலை சம்பவத்தை தொடர்ந்து முறப்பநாடு, வல்லநாடு, கலியாவூர், அகரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

உடல் அடக்கம்

இதற்கிடையே, கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் உடல் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு நேற்று காலை 10 மணியளவில் டாக்டர் செல்வமுருகன் தலைமையிலான மருத்துவ குழுவினர் லூர்து பிரான்சிஸ் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

பின்னர் அவரது உடல் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன் முன்னிலையில், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள் சொந்த ஊரான புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டியாபுரத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பலர் மரியாதை செலுத்தினர். பின்னர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.


Next Story