கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
அரசு வேலை வாங்கித்தருவதாக கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கோவை
அரசு வேலை வாங்கித்தருவதாக கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது:-
அரசு ேவலை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், புளியம்பட்டியை சேர்ந்த மாரிசாமி, கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:-
கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ஆத்மா சிவக்குமார் என்பவர், கடந்த ஆட்சியின் போது அமைச்சர்கள் பலரை தனக்கு தெரியும் என்றும், கிராமநிர்வாக அதிகாரி பதவி வாங்கித் தருவதா கவும், அதற்கு ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
அதை நம்பி, அரசு தேர்வாணைய தேர்வை எழுதிவிட்டு ரூ.8 லட்சத்து 20 ஆயிரத்தை ஆத்மா சிவக்குமார் மற்றும் அவருடைய உறவினர்களிடம் கொடுத்தேன். ஆனால் வேலையும் வாங்கித் தரவில்லை. பணத்தையும் திரும்ப தரவில்லை.
இவ்வாறு அந்த புகாரில் கூறி இருந்தார்.
ரூ.3½ கோடிக்கு மேல் மோசடி
இதேபோல் அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடமும் மோசடி நடைபெற்றதாக தெரிகிறது. ரூ.3½கோடிக்கு மேல் மோசடி செய்ததாக ஆத்மாசிவக்குமார், உறவினர் மணிகண்டன், சத்யபாமா, ஜெயகிருஷ் ணன் ஆகியோர் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராய ணன் உத்தரவின்பேரில், துணை சூப்பிரண்டு முரளி, இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஆத்மா சிவக்குமார் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் தலைமறைவாக இருந்த ஆத்மா சிவக்குமாரின் உறவினர் ஜெயகிருஷ்ணன் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் மோசடி செய்யப்பட்ட பணம் எங்கெங்கு முதலீடு செய்யப்பட்டது? என்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
காவலில் எடுத்து விசாரணை
அதன்பிறகு ஜெயகிருஷ்ணன் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ஏற்கனவே கைதான ஆத்மா சிவக்குமாரை ஆந்திர மாநில போலீசாரும் காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.