குறுமிளகு திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது
குறுமிளகு திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது
பந்தலூர்
பந்தலூர் தாலுகா கையுன்னி அருகே போத்துகொல்லியை சேர்ந்த பத்ரோஸ் என்பவர் மிளகு கடை நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது கடையை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் 100 கிலோ குறுமிளகை திருடி சென்றனர். இதேபோன்று காளியோடு பகுதியில் மோகன்தாஸ் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், 100 கிலோ குறுமிளகை திருடி சென்றனர். இதுகுறித்த புகார்களின் பேரில் எருமாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தேவாலா துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின்படி எருமாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா, சப்-இன்ஸ்பெக்டர் மோகன், ஏட்டு சந்திரன் மற்றும் போலீசார் மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர். இந்த வழக்கில் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் புல்பள்ளியை சேர்ந்த பிஜீஸ்மணி என்ற சாம்பார் மணியை(44) போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், 2-வதாக மற்றொருவர் கைது செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.