கைதான பாதிரியார் மீது மேலும் ஒரு பெண் புகார்
ஆபாச படம் வெளியான விவகாரத்தில் கைதான பாதிரியார் மீது மேலும் ஒரு பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
நாகர்கோவில்:
ஆபாச படம் வெளியான விவகாரத்தில் கைதான பாதிரியார் மீது மேலும் ஒரு பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பாதிரியார்
கொல்லங்கோடு அருகே உள்ள பாத்திமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ (வயது 29). பாதிரியாரான இவர், இளம் பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இந்த நிலையில் பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த ஒரு நர்சிங் மாணவி பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது புகார் அளித்தார். தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அந்த புகாரில் கூறியிருந்தார்.
அதன்படி பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது 5 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் முதலில் அடைத்தனர். பின்னர் பாதுகாப்பு கருதி அவர் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டார்.
மேலும் ஒரு பெண் புகார்
இதற்கிடையே வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி பாளையங்கோட்டை சிறையில் இருந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை நாகர்கோவிலுக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். அதன்பிறகு அவரை மீண்டும் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் ஒரு பெண், பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கடந்த 2022-ம் ஆண்டு பாதிரியாருடன், தான் செல்போன் வாட்ஸ்-அப் மூலம் சாட்டிங் செய்தேன். பின்னர் அவரது நடவடிக்கை பிடிக்காததால் நான் ஒதுங்கிக் கொண்டேன். ஆனாலும் அவர் எனக்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறியுள்ளார். இந்த புகாரின் மீதும் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.