விடைத்தாள் திருத்தும் மையங்களை போதிய வசதிகள் உள்ள இடத்தில் அமைக்க வேண்டும் பட்டதாரி ஆசிரியர் கழக கூட்டத்தில் தீர்மானம்
விடைத்தாள் திருத்தும் மையங்களை போதிய வசதிகள் உள்ள இடத்தில் அமைக்க வேண்டும் என உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் கடலூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தெரசா கேத்ரின், மாவட்ட துணை தலைவர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஹரிகிருஷ்ணன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் பால்கி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கூட்டத்தில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்திட வேண்டும். ஆசிரியருக்கு பணி பாதுகாப்பை உருவாக்கிட வேண்டும். ஆசிரியர், ஊழியர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கிட வேண்டும்.
தனி ஊழியர்கள் நியமனம்
பள்ளிகளில் இ.எம்.ஐ.எஸ். பதிவு பணியினை செய்திட தனி ஊழியர்களை நியமனம் செய்திட வேண்டும். விடைத்தாள் திருத்தும் மையங்களை, ஆசிரியர்களுக்கு போதிய வசதிகள் இருக்கும் இடத்தில் அமைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் கழக நிர்வாகிகள் சீனுவாசன், ஹெலன், பாரதிதாசன், செல்வம், கமலவேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் ராம் பாபு நன்றி கூறினார்.