மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம்
சீர்காழியில் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம்
சீர்காழி:
சீர்காழி புதிய பஸ் நிலைய வளாகத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் மற்றும் சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரசார ஊர்வலம் மற்றும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமை தாங்கினார். மதுவிலக்கு போலீசார்கள் மணிமாறன், பாலகுரு, தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தர் அமல்ராஜ் வரவேற்று பேசினார். விழிப்புணர்வு ஊர்வலத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி தொடங்கி வைத்து, புதிய பஸ் நிலைய வளாகத்தில் இருந்த ஆட்டோ மற்றும் கார் ஓட்டுனர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி பேசுகையில், குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டக்கூடாது. சாராயத்தை குடிக்க கூடாது என்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் பேசினார். தொடர்ந்து ஊர்வலமானது கச்சேரி ரோடு, ஆஸ்பத்திரி சாலை, கொள்ளிடம் முக்கூட்டு, மணிக்கூண்டு வழியாக பழைய பஸ் நிலையம் வந்தடைந்தது. இதில் போலீசார்கள் பாலமுருகன், ஸ்ரீதர் மற்றும் ஆட்டோ, கார் ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் மற்றும் சாராயத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.